• Sun. Feb 15th, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

நாட்டுப்புற மேடைக் கலைஞர்கள் சங்கம் சார்பில் ஆண்டு விழா..,

Byமுகமதி

Feb 15, 2026

புதுக்கோட்டையில் நாட்டுப்புற மேடைக் கலைஞர்கள் சங்கம் சார்பில் ஆண்டு விழா நடைபெற்றது.

தமிழ்நாட்டில் அதிக அளவில் நாட்டுப்புற மேடைக் கலைஞர்கள் இருக்கும் மாவட்டங்களில் புதுக்கோட்டை மாவட்டம் முதன்மை இடத்தை பெறுகிறது. இங்குள்ள கலைஞர்கள் சினிமா துறையிலும் மிளிர்ந்து வருவதால் திரைப்பட நடிகர்கள் சங்கத்தில் தேர்தலிலும் கலந்து கொண்டு வாக்களிக்கும் உரிமையை பெற்றிருக்கிறார்கள்.

அதேபோல் வெள்ளித் திரையிலும் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த கலைஞர்கள் நிறையப் பேர் புகழ்பெற்று விளங்கி வருகிறார்கள். அந்த வகையில் நாட்டுப்புற மேடை கலைஞர்களுக்கு என சங்கம் தொடங்கி 11 ஆண்டுகளாக ஆண்டு விழா நடத்தி வருகிறார்கள்.

நேற்று இரவில் நடைபெற்ற 11-ஆம் ஆண்டு விழாவிற்கு சங்கத்தின் தலைவர் முருகையா தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் ஆக்காட்டி ஆறுமுகம் முன்னிலை வகித்து நிகழ்ச்சிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார்.
இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு கனிமவளத்துறை அமைச்சர் மாண்புமிகு எஸ்.ரகுபதி, புதுக்கோட்டை மாநகரத்தாய் திலகவதி செந்தில், சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கவிதைப் பித்தன், தொழிலதிபர்கள் எஸ். வி.எஸ். ஜெயக்குமார், மாங்குடியார், திரைப்பட நடிகர்கள் போஸ் வெங்கட், மதன், மெட்ரிக் பள்ளிகளின் மாநிலத் தலைவர் பி.டி.அரசகுமார், திமுக வடக்கு மாவட்ட செயலாளர் கே.கே.செல்லபாண்டியன், மக்கள் இசை கலைஞர்கள் செந்தில் கணேஷ் ராஜலட்சுமி ஆகியோர் கலந்துகொண்டு சங்கத்தை வாழ்த்திப் பேசினார்கள்.

நாட்டுப்புற மேடைக் கலைஞர்களின் பாடல்கள், தப்பாட்டம், ஒயிலாட்டம், சாமியாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலைகளும் நிகழ்த்தப்பட்டன. புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பார்வையாளர்களும் வந்து கலந்து கொண்டு ரசித்தனர்.