பொன்னேரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மேடையில் பாஜக அண்ணாமலை, திடீரென சீமானைப் புகழ்ந்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.
முன்னதாக, சென்னை வந்திருந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சீமான் சந்தித்து பேசியதாக தகவல் வெளியானது. ஆனால், அந்த தகவலில் உண்மை இல்லை என சீமான் மறுத்தார். ”2026 சட்டமன்ற தேர்தலை நாங்கள் தனித்து சந்திக்கிறோம். இதனால், எங்கள் வேட்பாளர்களை இப்போதில் இருந்தே அறிவித்து வருகிறோம். நிர்மலா சீதாராமனை சந்தித்திருந்தால், சந்தித்தேன் என நேரடியாக சொல்வேன்” என கூறியிருந்தார்.
இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக் கழகத்தில் உள்ள தமிழ் பேராயகம் சார்பில், மாபெரும் பேச்சு போட்டியின் இறுதிச்சுற்று மற்றும் பரிசளிப்பு விழா நடைபெறுகிறது. இதில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். இந்நிகழ்ச்சியில் ஒரே மேடையில் இருவரும் அமர்ந்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பேசு பொருளாகியுள்ளது.
இந்நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, “சீமான் அரசியல் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் என்பதைவிட போர்க்களத்தில் நிற்கக் கூடிய தளபதியாக பார்க்கிறேன். அவர் எடுத்துக் கொண்ட கொள்கையில் நிலையாக இருக்கிறார். எனக்கும் சீமானுக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது. நான் தேசியத்தில் தமிழை பார்க்கிறேன். சீமான் தமிழில் தேசியத்தை பார்க்கிறார்” என்றார்.
மேடையிலேயே சீமானை அண்ணாமலை புகழ்ந்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.
இதைப் பார்க்கும் போது சட்டைப் பையில் இருந்து பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது என்று அங்கிருந்தவர்கள் முணுமுணுத்தனர்.
மேடையில் சீமானைப் புகழ்ந்த அண்ணாமலை
