தாய்மொழியில் கற்பது அடிப்படை உரிமை என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
உலகத் தாய்மொழி தினத்தை முன்னிட்டு, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில், “அனைத்து மக்களின் தாய் மொழி உரிமையைப் பாதுகாக்கும் விதமாக, சர்வதேச தாய்மொழி தினம், 2000-ம் ஆண்டிலிருந்து, பிப்ரவரி 21-ம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது. நம்முடைய எண்ணம், படைப்பாற்றல் தாய்மொழி வழியாகவே நடக்கிறது. மனிதன் பேசும் மொழியில் கல்வி கற்பிக்கப்பட்டால் சிந்தனைத்திறன் பெருகும். ஆகையால் அடிப்படைக் கல்வி என்பது தாய்மொழியில் கற்பிக்கப்பட வேண்டியது கட்டாயம்.
உலகநாடுகள் கூட்டமைப்பான யுனெஸ்கோ, தாய்மொழி வழியிலான பன்மொழிக்கற்றலை வலியுறுத்துகிறது. தாய்மொழியில் கற்பது அடிப்படை உரிமை என்றும் தெரிவித்துள்ளது. இதன்படியே, பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கை, ஐந்தாம் வகுப்பு வரை தாய்மொழியில் அடிப்படைக் கல்வியை வலியுறுத்துகிறது.
இன்றைய டிஜிட்டல் உலகில், மொழிகளை இணைப்பதும், பல மொழிகள் கற்கும் வாய்ப்பை உருவாக்குவதும் இன்றியமையாதது. நம் தாய்மொழியாம் தமிழை அடிப்படையாகக் கொண்டு, பல மொழிகள் கற்போம். தமிழ் மொழியின் பெருமையை உலகறியச் செய்வோம்” இவ்வாறு பதிவிட்டுள்ளார்.