அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்தும், திமுக அரசை கண்டித்தும் கோவையில் தனது வீட்டு முன்பு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தன்னைத் தானே 6 முறை சாட்டையால் அடித்து நூதனப் போராட்டம் நடத்தினார்.
இதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “இன்று நாங்கள் முன்னெடுத்துள்ள இந்தப் போராட்டம் இன்னும் தீவிரமடையும். இது தனி நபருக்கு எதிரான போராட்டம் அல்ல. பொருளாதாரம் சீர்குலைந்துள்ளது. காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. எனவே இந்தப் போராட்டத்தை நாங்கள் முன்னெடுத்துள்ளோம்.
எதற்காக 6 முறை சாட்டையடி என்று நீங்கள் கேட்கலாம். முருகப் பெருமானிடம் இந்த ஆறு சாட்டையடி மூலம் ஒரு வேண்டுதல் வைத்துள்ளோம். நம் தமிழ் மண்ணில் உடலை வருத்தி இறைவனிடம் வைக்கப்படும் வேண்டுதலுக்கு ஒரு விளைவு இருக்கும் என்று மரபு. நான் அந்த மரபையே பின்பற்றி இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளேன்.
நான் காவல்துறையில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தபோது 10-ம் வகுப்பு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொல்லப்பட்ட வழக்கை விசாரித்தேன். குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தந்தேன். அப்போது அந்தத் தாய் என்னிடம் குற்றவாளியை பிடித்துவிட்டீர்கள், என் மகளைத் திருப்பித் தருவீர்களா எனக் கேள்வி கேட்டார். அந்தக் கேள்வி என்னை அரசியலில் பயணிக்க வைத்தது.
காவல்துறையில் எஃப்ஐஆர் கசிவது என்பதெல்லாம் நடக்க வாய்ப்பே இல்லை. நானும் ஒரு ஐபிஎஸ் அதிகாரியாக இருந்திருக்கிறேன். எஃப்ஐஆர் பிரதி ஒரு நகல் நீதிமன்றத்துக்கும், ஒரு நகல் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் கொடுக்கப்படும். இதை வேண்டுமென்றே யாரோ பதிவிறக்கம் செய்து பரப்பியிருக்க வேண்டும். திமுக ஆட்சியிலிருந்து அகற்றப்படும் வரை காலணியை அணியப் போவதில்லை.இந்த ஆட்சி தவறு செய்கிறது. அறவழியில் போராடக் கூட அனுமதியில்லை. எல்லாவற்றையும் கண்டித்தே நாங்கள் போராட்டத்தை கையில் எடுத்துள்ளோம்” என்றார்.