சூப்பர் மார்க்கெட்களிலும் ‘ஒயின் விற்பனை’ என்ற மகாராஷ்டிர அரசின் அறிவிப்பை எதிர்த்து வரும் பிப்ரவரி 14-ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அன்னா ஹசாரே அறிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் சூப்பர் மார்க்கெட்டுகளில் மதுவை விற்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. இந்த முடிவுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். காந்தியவாதி அன்னா ஹசாரேவும் இந்த முடிவுக்கு அதிருப்தி தெரிவித்துள்ளார். சூப்பர் மார்க்கெட்டுகளில் மது விற்பனைக்கு அனுமதி அளிக்கும் அரசின் முடிவை எதிர்த்து அன்னா ஹசாரே காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு அன்னா ஹசாரே எழுதிய கடிதத்தில், பிப்ரவரி 14 முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சூப்பர் மார்க்கெட்டுகளில் மதுவை விற்பதால் பெண்களுக்கு பாதிப்பு ஏற்படும் என அரசு ‘நினைக்கவில்லையா’ என அன்னா ஹசாரே கடிதத்தில் கூறியுள்ளார்.
மாநிலத்தின் 36 மாவட்டங்களில் அனைவரும் தங்கள் பொது எதிர்ப்பை வெளிப்படுத்தும் அறிக்கையை உங்களுக்கு அனுப்பியுள்ளனர். இந்த முடிவுக்கு எதிராக மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்த அனைவரும் தயாராக உள்ளனர். அரசு விழித்துக் கொள்ளாவிட்டால் போராட்டத்தை தவிர வேறு வழியில்லை. ‘நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி எனது கடிதத்திற்குப் பதில் சொல்வதில்லை.
இப்போது அம்மாநில முதலமைச்சரும் அதையே செய்கிறார். எந்த ஒரு தனிப்பட்ட விஷயத்துக்காகவும் நான் பிரதமருக்கோ, முதல்வருக்கோ கடிதம் எழுதியதில்லை. சமூகப் பிரச்சினைகளில் மட்டுமே நான் கடிதங்கள் எழுதுகிறேன் என தெரிவித்துள்ளார்.