அரசு துணை சுகாதார நிலையத்தில், பயிற்சி பெற்ற அங்கன்வாடி ஊழியர்கள், எந்த நிபந்தனையும் இன்றி கிராம சுகாதார செவிலியர் பணியிடம் வழங்கக் கோரி நேற்று சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அங்கன்வாடி ஊழியர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பிரேமா தலைமை தாங்கினார். அப்போது, அரசு துணை சுகாதார நிலையத்தில் உடனடியாக பணி வழங்கக்கோரி தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தின் போது சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பிரேமா கூறியதாவது..,
கிராம சுகாதார செவிலியர் பயிற்சி பெற்ற அங்கன்வாடி ஊழியர்கள் 1,800 பேருக்கு சுகாதாரத் துறை, பணி நியமன ஆணை வழங்காமல் காலதாமதம் செய்து வருகிறது. அங்கன்வாடி ஊழியர்களாக பணியாற்றிய காலத்தில் அந்த பணியிலிருந்து வரும் ஊதியத்தை விட்டுவிட்டு கிராம சுகாதார செவிலியர் பயிற்சியை 2 ஆண்டுகள் பயின்றோம். ஆனால், 2021-ம் ஆண்டிலிருந்து பயிற்சி முடித்த யாருக்கும் கிராம சுகாதார செவிலியராக பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை.
இதனால், பயிற்சி முடித்த அனைத்து அங்கன்வாடி ஊழியர்களும் மிகுந்த மன உளைச்சலில் உள்ளனர். 2 ஆண்டுகள் பயிற்சிக்கு சென்றதால் அங்கன்வாடி மையத்தில் ஊதிய உயர்வு உள்ளிட்ட எந்த சலுகைகளும் தற்போது எங்களுக்கு கிடைக்கவில்லை. இது தொடர்பாக சுகாதாரத் துறை செயலாளரை சந்தித்து பேச உள்ளோம். பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை என்றால் காத்திருப்பு போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.