பரவை சத்தியமூர்த்தி நகரில் சாதி சான்றிதழ் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த 60 வயது மூதாட்டி மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாவட்டம் பரவை அருகே பழங்குடியினர் சாதி சான்றிதழ் கேட்டு பத்தாவது நாளாக பள்ளியை புறக்கணித்து மாணவர்கள் பெற்றோர்கள் போராட்டம் செய்து வந்த நிலையில் 60 வயது மூதாட்டி ஒருவர் பேசிக் கொண்டிருந்த போதே மயங்கி விழுந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாவட்டம் பரவை பேரூராட்சிக்கு உட்பட்ட சத்தியமூர்த்தி நகர் பகுதியில் காட்டு நாயக்கர் சமுதாய மக்கள் வசித்து வருகின்றனர்.
இவர்களுக்கு கடந்த ஆண்டுக்கு முன் வரை இந்து காட்டு நாயக்கர் (ST) பழங்குடியினர் சாதி சான்றிதழ் பெற்று வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த ஓராண்டாக பல்வேறு காரணங்கள் கூறி மதுரை மாவட்ட நிர்வாகம் இவர்களுக்கு இந்து காட்டுநாயக்கர் (ST) பழங்குடியினர் சாதி சான்றிதழ் தர மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது பள்ளி மாணவர்கள் பள்ளி தேவைக்காக ஆன்லைனில் பதிவு செய்யும் பொழுது வழங்க மறுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சாதி சான்றிதழ் வழங்காத மதுரை மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து ஒன்பது நாட்களாக பல்வேறு கட்டமாக போராட்டம் நடத்தி வந்த நிலையில் இன்று பத்தாவது நாளாக மதுரை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அப்போது போராட்டத்தில் தமிழக அரசுக்கும் மதுரை மாவட்ட நிர்வாகத்துக்கும் கோரிக்கை வைத்து கோஷங்களை எழுப்பி வந்த நிலையில் சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த பாண்டியம்மாள் (60) என்ற மூதாட்டி கோஷங்களை எழுப்பும் போது மயங்கி விழுந்ததால் அவரை ஆட்டோவில் சமயநல்லூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து பத்தாவது நாளாக பழங்குடியினர் சாதி சான்றிதழ் கேட்டு சத்தியமூர்த்தி நகர் காட்டுநாயக்க சமுதாய மக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 60 வயது மூதாட்டி மயங்கி விழுந்ததால்அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.