• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பாறையில் தானியங்களை அரைப்பதற்கான 8000 ஆண்டுகள் பழமையான அமைப்பு கண்டுபிடிப்பு

ByKalamegam Viswanathan

Apr 17, 2023

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே கோபால்சாமி மலைப் பகுதியில் புதிய கற்காலத்தில் பாறையில் உருவாக்கப்பட்ட அரவைத் தொழில்நுட்ப அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நூர்சாகிபுரம் சிவகுமார் கொடுத்த தகவலின் பேரில், ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் ராஜகுரு, வே.சிவரஞ்சனி, மனோஜ், பிரவீனா ஆகியோர் அப்பகுதியில் கள ஆய்வு செய்தனர். இங்கு கல்லாலான வட்டச்சில்லு, அரைப்புக்கற்கள், சிவப்பு நிற பானை ஓடுகள், புதிய கற்கால கற்கோடரி, இரும்புக் கசடுகள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.


மேலும் பாறைகளில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் வழுவழுப்பாகத் தேய்த்த சிறிய மற்றும் பெரிய பள்ளங்கள், அம்மி போன்ற அமைப்பும் உள்ளன. இவை அரைப்புக் கற்களைக் கொண்டு தானியங்களை இடிக்கவும், அரைக்கவும், கொட்டைகளை உடைக்கவும் பயன்படுத்திய இடங்களாக இருக்கலாம் என ராஜகுரு தெரிவித்தார். பல்லாங்குழி அமைப்பும், ஒரு பாறைச் செதுக்கலும், இரும்புக்காலத்தைச் சேர்ந்த சேதமடைந்த கல்திட்டையும் இங்கு உள்ளன. அகழாய்வு செய்து இங்கு நிலவிய புதிய கற்காலப் பண்பாட்டை அரசு வெளிக்கொணரவேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.