கோவை பந்தய சாலையில் உள்ள தனியார் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமுமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், ஆதவ் அர்ஜுனாவின் கருத்துக்கு, உதயநிதி தேர்தலில் நின்று வெற்றி பெற்றுதான் வருகிறார். அதை எவ்வாறு குறை கூற முடியும். தந்தையோ, தாயோ அரசியல் இருக்கிறார்கள் என்பதற்காக அவருடைய வாரிசுகள் அரசியலில் வரக்கூடாது, கட்சியில் வரக்கூடாது என்பதில்லை எனவும், இந்தியா முழுவதும் அவ்வாறு வருகிறார்கள், ஒருவரை திட்டமிட்டு முன்னிறுத்துவது தான் கூடாது, அதை மீறி மக்கள் வாக்களித்து வருகிறார்கள், அதை எவ்வாறு குறைகூறி விட முடியும் எனவும், அரசியலில் சீனியாரிட்டி முக்கியம்தான், ஆனால் முக்கிய பதவிகளுக்கு, குறிப்பாக கட்சிப் பதவிகளிலோ ஆட்சியில் உள்ள பதவிகளுக்கோ சீனியாரிட்டி மட்டும் ஒரு காரணமாக இல்லை எனவும் அதற்காக திமுகவையோ வாரிசு அரசியலை ஆதரித்தோ தான் பேசவில்லை, எதார்த்தத்தை கூறுவதாக தெரிவித்தார். மேலும் பிறப்பால் ஒருவர் ஒரு குடும்பத்தில் பிறந்திருக்கிறார் என்பதற்காக அவர்களை முன்னிறுத்தக்கூடாது என ஆதவ் அர்ஜுன் பேசியிருப்பதாக இருந்தால், அவர்கள் தேர்தலில் நின்று வெற்றி பெற்று வரும்போது எப்படி தடுக்க முடியும், எவ்வாறு தவறாக முடியும் என கேள்வி எழுப்பினார்.

கூட்டணி முடிவுகள் தவிடுபொடியாகும் என தெவெக தலைவர் விஜயின் கருத்துக்கு பதிலளித்த டிடிவி தினகரன், எந்த கட்சியிலும் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என கூறுவது இயற்கை, அதுபோல திமுக கூறியிருக்கிறது, அதில் அகம்பாவமோ ஆணவமோ இருப்பதாக தனக்கு தெரியவில்லை எனவும், திமுகவை ஆதரித்து பேசுவதாக நினைக்க வேண்டாம் , எதார்த்தத்தை பேசுவதாக தெரிவித்தார்.

தவெக உடன் அமமுக கூட்டணி அமையுமா என்பது தொடர்பான கேள்விக்கு, யூகங்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை எனவும் தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக இருக்கிறது அதை பலப்படுத்துவதற்கு எந்த கட்சிகள் வந்தாலும் நாங்கள் ஏற்றுக் கொள்வோம் என பதிலளித்தார். மேலும் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சியை அமைப்பதற்காக தேசிய ஜனநாயக கூட்டணி முயற்சி செய்கிறது, அதன்படி திமுக ஆட்சிக்கு எதிரான ஓட்டுகள் தேசிய கூட்டணி ஜனநாயக கூட்டணிக்கு வரும் எனவும் தற்போது வெள்ள நிவாரணத்திற்கு 2000 கோடி வேண்டுமென கேட்டிருக்கிறார்கள், அதை கொடுக்கக்கூடிய இடத்தில் மத்திய அரசு இருக்கிறது, திமுக பாஜகவை காட்டி மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தார்கள், இந்த முறை அது நடக்காது எனவும் ஏனென்றால் திமுக மீது எவ்வளவு ஊழல் குற்றச்சாட்டுகள், ஊழல் முறை கேடுகள், ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப் போல மூன்று மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்ட பாலமே வெள்ளத்தில் அடித்து செல்கின்ற அளவுக்கு இந்த ஆட்சி இருக்கிறது எனவும் விமர்சித்தார். விழுப்புரம், கடலூர் கள்ளக்குறிச்சி போன்ற மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புக்கு மழை மட்டுமே காரணம் அல்ல எனவும் அங்கு மக்கள் உணவுக்கு வழி இல்லாமல் உடைகள் இல்லாமல் உடைமைகளை இழந்து தவித்ததற்கு காரணம் சாத்தனூர் அணையை திட்டமிடாமல் திறந்து விட்டதுதான் எனவும் பல மூத்த அமைச்சர்கள் திமுகவில் இருந்தாலும் இந்த ஆட்சி என்பது இன்றைக்கு மக்கள் விரோத ஆட்சி, தேர்தல் வாக்குறுதிகளில் 90 சதவீதத்துக்கு மேல் நிறைவேற்ற முடியாத ஆட்சி எனவும் 2024 தேர்தலில் வெற்றி பெற்றதற்கு காரணம் ஏழை எளிய மக்களை அவர்கள் பணநாயகத்தின் மூலம் மக்களின் வாக்குகளை பெற்றார்களே தவிர, 2026க்கு அவர்களின் பணநாயகம் செல்லுபடி ஆகாது எனவம் ஏனென்றால் தமிழ்நாடு முழுவதும் திமுக ஆட்சி மீது அந்த அளவுக்கு அதிருப்தி இருக்கிறது, என்னதான் கூட்டணி அமைத்திருந்தாலும் கூட்டணி பலம் இருந்தாலும் அதையெல்லாம் முறியடித்து மக்கள் மன்றத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என தெரிவித்தார்.

திமுகவுக்கு எதிராக எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுக, ஆட்சியை எடப்பாடி பழனிச்சாமியிடம் கொடுத்த பிறகு நந்தவனத்தில் ஒரு ஒரு ஆண்டி கூத்தாடி கூத்தாடி கெடுத்தான் என்பது போல, அனைத்து தொண்டர்களுக்கான கட்சியை , யாரோ இரண்டு மூன்று பேர் கோலோச்சுகின்ற குறுகிய வட்டத்திற்குள் அடைத்து வியாபாரம் நிறுவனம் போல் ஆக்கி,டென்டர் பார்ட்டி ஆக்கி வியாபாரம் ரீதியாக அந்த கட்சியை நடத்துகின்ற காரணத்தால்தான், இன்றைக்கு இரட்டை இலை இருந்தும் தேர்தலில் சோபிக்க முடியவில்லை என தெரிவித்தார். 2024 தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறுவதற்கு எடப்பாடி பழனிச்சாமி மறைமுகமாக உதவி செய்தார் என்பது தான் அதிமுக தொண்டர்களின் குமுறல்களும் அதுதான், அதிமுகவின் இரட்டை இலை சின்னம், நான்காண்டுகள் ஈட்டிய பொருளாதாரத்தை திமுகவின் வெற்றிக்கு பயன்படுத்துகிறார்கள், காரணம் தங்கள் மீது வழக்கு வந்துவிட கூடாது, சிறைக்கு செல்லக்கூடாது, கொலை கொள்ளை வழக்குகள் வந்துவிடக்கூடாது என்ற அச்சத்தில் திமுகவுக்கு பி டீமாக கள்ளக்கூட்டணி அமைத்துக் கொண்டு எடப்பாடி பழனிச்சாமி கட்சியை நடத்துகிறார், அதனாலதான் 2026 தேர்தலுக்குப் பிறகு அதிமுகவை உறுதியாக மூடுவிழா காண எடப்பாடி பழனிச்சாமி தயாராகிவிட்டார் என வும் தானும் தனது குடும்பமும் தப்பித்தால் போதும், திமுகவை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பதற்காகவே கட்சியை நடத்தி வருகிறார் என குற்றம்சாட்டிய டிடிவி தினகரன், அதிமுக தொண்டர்களும் நிர்வாகிகளும், இரட்டை இலை பழனிச்சாமியிடம் இருக்கிறது என்பதற்காக காவடி தூக்கினால் உறுதியாக அவர்களை யாராலும் காப்பாற்ற முடியாது எனவும் எடப்பாடி பழனிச்சாமி எந்த தியாகமும் செய்யாமல் வந்ததன் காரணமாக திமுகவிற்கு உதவி செய்வது தான் தியாகம் என கூறுவதால் அதிமுக தொண்டர்கள் விழித்துகொள்ளவில்லை என்றால் 2026 தேர்தலுக்கு பிறகு அதிமுகவிற்கு மூடுவிழா காண்பார் என தெரிவித்தார்.
கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் சசிகலாவை விசாரிக்க அனுமதி வழங்கியது தொடர்பான கேள்விக்கு , யாருடைய லாபத்திற்காக கொடநாடு எஸ்டேட்டில் கொள்ளை நடைபெற்றது என்பது அனைவருக்கும் தெரியும் எனவும் அவர்கள் ஆட்சிப் பொறுப்பில் இருந்த காரணத்தினால், சாட்சிகளை அளிக்கின்ற இடத்தில் இருந்ததால், அவர்கள் தப்பித்துக் கொண்டிருக்கிறார்கள், அதை மீறி தவறு செய்தவர்கள் இன்றைக்கு இல்லை என்றாலும் நாளை மாட்டிக் கொள்வார்கள் எனவும் இதில் நல்ல தீர்ப்பு வர வேண்டும் என்பதுதான் அனைவருடைய எதிர்பார்ப்பு என தெரிவித்தார்.

வயதில் மூத்த தலைவரான ராமதாஸின் அறிக்கைகளுக்கு பதில் கூறும் போது, முதல்வர் பதில் கூறிய விதம் உண்மையில் அரசியலில் உள்ள ஒருவனாக தனக்கு வருத்தம் அளிப்பதாகவும், காரணம் ஒரு கட்சியின் தலைவர் 40,50 ஆண்டுகள் அரசியல் அனுபவம் உள்ளவர், முதலமைச்சர், ஒரு பெரிய தலைவரின் மகன் , இவ்வாறு ராமதாஸ் கூறிய கருத்துக்கு இவருக்கு எதிரான கருத்து என்பதால் இவ்வாறு பேசியது உண்மையாக வருந்ததக்கது எனவும் அதேபோல நான்காண்டுகள் ஆட்சியில் இருந்த பழனிச்சாமி பேசியது போலவே பழனிச்சாமி பாணியில் ஸ்டாலினும் பேசிக் கொண்டிருக்கிறார், 2021 தேர்தலில் பழனிச்சாமி தோல்வியுற்றதைப் போல ஸ்டாலினும் தோல்வியை நோக்கி செல்கிறார் என்பது தெரிவதாகவும் காரணம் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை அவரால் நிறைவேற்ற முடியவில்லை, அதனால் ஊழல் குற்றச்சாட்டுகள், முறைகேடுகள் பெருகி வருகிறது எனவும் என்னதான் கூட்டணி இருந்தாலும், வெற்றியை தக்கவைத்து கொள்ள முடியாது என்ற விரக்தியால் தான் முதலமைச்சர் பேசி வருவதாக தெரிவித்தார்.

சசிகலாவை முதல்வரின் வேட்பாளராக கொண்டு வருவது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த டிடிவி தினகரன், நாங்கள் அனைவரும் இணைந்து மக்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி, அனைத்து கட்சிகளும் ஒருமித்த கருத்துகளோடு, தகுதியான நல்ல வேட்பாளரை முதல்வர் வேட்பாளராக அறிவிப்போம் எனவும் தேர்தலுக்கு முன்பே தங்களது முதல்வர் வேட்பாளரை அறிவிப்போம் எனவும் தமிழ்நாட்டில் அவ்வாறு செய்தால் நன்றாக இருக்கும் உறுதியாக நாங்கள் அதை செய்வோம் என பதிலளித்தார்.