சிக்கிம் மாநிலத்தில் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட உள்ள பாஜகவின் தேர்தல் அறிக்கையில் அம்மா உணவகம் இடம் பெற்றுள்ளது.
32 உறுப்பினர்களைக் கொண்ட சிக்கிம் சட்டசபைக்கும், மாநிலத்தில் உள்ள ஒரே ஒரு மக்களவைத் தொகுதிக்கும் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. 2019 பாராளுமன்ற தேர்தலில் மாநிலத்தில் உள்ள ஒரே ஒரு மக்களவைத் தொகுதியில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா வெற்றி பெற்றது. சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 32 இடங்களில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா 17 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.
இந்நிலையில், சிக்கிம் சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வெளியிட்டார். அதில், சிக்கிம் மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் பெண்களால் நடத்தப்படும் ‘அம்மா உணவகம்’ என்ற மலிவு விலை உணவகம் திறக்கப்படும் என அறிவித்துள்ளது.
பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள் விவரம் வருமாறு:-
சிக்கிம் மாநிலத்தில் ஐ.ஐ.எம். கல்வி நிறுவனம் தொடங்கப்படும், அடுத்த 5 ஆண்டுகளில் சிக்கிமில் பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு 25,000 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும், பிரதம மந்திரி கிசான் யோஜனா திட்டத்தின் கீழ், விவசாயிகள் ஆண்டுக்கு வழங்கப்படும் 6,000 ரூபாயை 9,000 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் போன்ற அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.