நினைவுகளின் சங்கமம் 30 ஆண்டுகளுக்கு பின் நேரில் சந்தித்த முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள் அரசு பள்ளிக்கு நிதியுதவி அளித்து அசத்தினர். மலைவாழ் மக்களின் பாரம்பரிய இசை, நடனத்துடன் கலை கட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 30 ஆண்டுகளுக்குப் பின் சந்தித்த முன்னாள் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் பள்ளி பருவ நினைவுகளை நினைவு கூர்ந்து நெகிழ்ச்சி அடைந்தனர்.
நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. பல ஆண்டுகள் பழமை வாய்ந்த இப்பள்ளியின் படித்த மாணவ, மாணவிகள் ஏராளமானோர் மத்திய, மாநில, அரசு மற்றும் தனியார் துறை களில் உயர் பதவிகளிலும் ராணுவம், காவல்துறை, டாக்டர், பொறியாளர்களாகவும் உள்ளதுடன் ஏராளமானோர் அமெரிக்கா, லண்டன், துபாய், ஆஸ்திரேலியா, போன்ற வெளி நாடுகளிலும் வசிக்கின்றனர். நீலகிரி மாவட்டத்தில் குறிப்பிடும் படியாக உள்ள இந்த பள்ளியில் கடந்த 1991ம் ஆண்டு முதல் 1998ம் ஆண்டு வரை படித்த மாணவர்கள் ஒன்று சேர்ந்து முன்னாள் மாணவர்கள் மாணவிகள் மற்றும் முன்னாள் ஆசிரியர்கள் சந்திப்பு விழாவை நடத்த முடிவு செய்தனர். இதை முன்னிட்டு வாட்ஸ் அப் குழு துவக்கப்பட்டு அதன் மூலம் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் பள்ளியில் படித்த சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளை ஒன்று சேர்த்தனர். இதை தொடர்ந்து மஞ்சூர் அரசு மேல் நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவ, மாணவிகள், முன்னாள் ஆசிரியர்கள் சந்திப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் சீனிவாசன் தலைமை தாங்கினார். முன்னாள் ஆசிரியர்கள் முன்னிலை வகித்தார்கள். தொடர்ந்து நடைபெற்ற விழாவில் பேசிய ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பலரும் தங்களது பள்ளி பருவத்தில் நடைபெற்ற சம்பவங்களை நினைவு கூர்ந்தார்கள். மேலும் ‘எழுத்தறித்தவன் ஆவான்’ என்ற பழமொழிக் கேற்ப முன்னாள் மாணவ, மாணவிகள் தங்களுக்கு கல்வி கற்று கொடுத்த முன்னாள் ஆசிரியர்களை கௌரவிக்கும் வகையில் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கியதுடன் அனைவரும் ஆசிரியர்கள் காலில் விழுந்து அவர்களின் ஆசியை பெற்றது நெகழ்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் ஆசிரியர்களின் வேண்டுகோளை ஏற்று தாங்கள் படித்த பள்ளிக்கு 4 கரும்பலகைகள், 4 பச்சை பலகைகள் மற்றும் பள்ளியின் மேம்பாட்டிற்கு ரூ.2 லட்சத்திற்கான காசோலையை தலைமை யாசிரியர் சீனிவாசனிடம் வழங்கி அசத்தினார்கள். இதை தொடர்ந்து நீண்ட இடைவெளி க்கு பின் சந்தித்த மாணவ, மாணவிகள் பலரும் ஒருவர் ஒருவர் நலம் விசாரித்து பழைய பள்ளி பருவ நினைவுகளை கூறி மகிழ்ந்தனர். மேலும் பலர் தங்களது குடும்பத்தினருடன் வந்திருந்தனர். அவர்களை நண்பர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தனர். தொடர்ந்து அனைவருக்கும் மதிய விருந்து வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்களான கீழ்குந்தா தீபக் பரதன், பிரகாஷ், சசி, அப்துல், யுவராஜ், செல்வநாயகம் மற்றும் முன்னாள் மாணவர்கள் செய்திருந்தனர்.மஞ்சூர் பேருந்து நிலையம் முதல் பள்ளிக்கூடம் வரை மலைவாழ் மக்களின் பாரம்பரிய இசை நடனத்துடன் முன்னாள் மாணவ மாணவிகள் நடனமாடி சென்றது மஞ்சூர் கிராமத்தை விழாக்காலம் கொண்டது .