

அல்லு அர்ஜுன் நடிப்பில், 2021 டிசம்பர் 17 அன்று வெளியான படம் புஷ்பா! சுகுமார் இயக்கத்தில் வெளியான இந்த படம் இந்தி மற்றும் தென்னிந்திய மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது. ஐம்பது நாட்களை திரையரங்குகளில் கடந்திருக்கும் புஷ்பா உலகம் முழுவதும் 350 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.
தெலுங்கில் வெளியான புஷ்பாவுக்கு இணையாக இந்தியில் வெளியான புஷ்பா வரவேற்பையும், வசூலிலும் வெற்றி பெற்றிருக்கிறது. பிராந்திய மொழி திரைப்படம் வேறு மாநில மொழிகளில் வெளியாகும்போது மொழி தெரியாமல் சம்பந்தபட்ட நடிகர்கள் டப்பிங் பேசமுடியாதபோது டப்பிங் பேசுகிறவரின் குரல்வளம் மிக மிக முக்கியம்!
இந்தியில் வெளியான புஷ்பா படத்தை பார்த்துவிட்டு அல்லு அர்ஜுனுக்கு டப்பிங் பேசியவரின் குரல் இயல்பாக பொருந்தி இருக்கிறது,அந்நியமாக தெரியவில்லை என்று திரைத்துறையினர் பாராட்டி வருகிறார்கள். இதற்கு காரணமானவர் பிரபல டப்பிங் கலைஞரான ஸ்ரேயாஸ் தல்பாடே.
இதுபற்றி ஸ்ரேயாஸ் தல்பாடே கூறும்போது, ஒரு ஹீரோவுக்கு டப்பிங் பேசியதற்காக இந்த அளவிற்கு பாராட்டு கிடைப்பது இதுதான் முதன்முறை. படம் பார்த்தவர்கள் அனைவருமே புஷ்பாவுக்கு பொருத்தமான குரல் என கூறினார்கள். என் மகள் கூட பலரும் அப்படிச் சொல்வதைக் கேட்டு, புஷ்பா படத்தை பார்த்துவிட்டு அன்றிரவு தூங்கப் போகும்போது என்னிடம் குட்நைட் புஷ்பா என்று கூறினார். இதுதான் எனது வேலைக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம். இந்த படத்திற்காக டப்பிங் பேச ஆரம்பித்த சமயத்தில் படத்தில் அல்லு அர்ஜுனின் நடிப்பை பார்த்ததும் எனக்கு 1970களில் துடிப்பான அமிதாப்பச்சனை பார்ப்பது போலவே இருந்தது என்று அல்லு அர்ஜுனுக்கு புகழாரம் சூட்டியுள்ளார் ஸ்ரேயாஸ் தல்பாடே!

