• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

திருக்கோயில்கள் அனைத்தும் நாளை மூடல்..!

ByA.Tamilselvan

Nov 7, 2022

நாளை நிகழும் சந்திர கிரகணத்தை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் கோயில், பழனி முருகன் உள்ளிட்ட கோயில்களில் நடை சாத்தப்பட்டு இரவு திறக்கப்பட உள்ளது.
நாளை (நவ.8-ம் தேதி) மதியம் 2.39 மணிக்கு தொடங்கி, மாலை 6.19 வரை சந்திர கிரகணம் நடைபெற உள்ளது. இதையொட்டி, திருப்பதி ஏழுமலையான் கோயில் உட்பட அனைத்து திருப்பதி தேவஸ்தான கோயில்களும் நாளை காலை 8.40 மணிக்கு மூடப்பட்டு, இரவு 7.20 மணிக்கு திறக்கப்பட உள்ளது.
அதன் பின்னர் கோயில் முழுவதும் சுத்தம் செய்யப்பட்ட பிறகு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். இதனால், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை, ஸ்ரீ வாணி அறக்கட்டளை தரிசனம், ரூ.300 சிறப்பு தரிசனம், ஆர்ஜித சேவைகள் மற்றும் மூத்த குடிமகன்களுக்கான தரிசனம், மாற்றுத் திறனாளிகளுக்கான தரிசனம் போன்ற அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது. மேலும், 8-ம் தேதி திருப்பதியில் சர்வ தரிசனத்திற்கான டோக்கன்கள் வழங்குவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் திருமலைக்கு சென்று, அங்குள்ள வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸ் 2-ன் வழியாக சர்வ தரிசன வரிசையில் சென்று மட்டுமே கோயில் நடை திறந்த பின்னர் சுவாமியை தரிசிக்க இயலும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுபோல், திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் மலைக்கோயிலில் நாளை மதியம் 12 மணிக்கு உச்சிகால பூஜை முடிந்தபின், பிற்பகல் 2:30 மணிக்கு அனைத்து சன்னதிகளும் அடைக்கப்படும். காலை 11:30 மணி முதல் படிப்பாதை, யானை பாதை, மின் இழுவை ரயில், ரோப்கார் சேவை இயங்காது. சந்திர கிரகணம் முடிவுற்றதும் மாலை 7 மணிக்கு மேல் சம்ப்ரோசன பூஜை நடைபெற்ற பின், சாயரட்ஜை பூஜையையும் தொடர்ந்து தங்க ரத புறப்பாடு, அதன் பின்னர் ராக்கால பூஜையும் நடைபெறும். இரவு 7 மணிக்கு மேல் வழக்கம்போல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.