தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் சென்னையில் இன்று அனைத்து அரசியல் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
தமிழகத்தில் 3.11 கோடி ஆண்கள், 3.24 கோடி பெண்கள், 9,120 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 6.36 கோடி வாக்காளர்கள் உள்ளனர். 68 ஆயிரம் வாக்குச்சாவடிகள் உள்ளன. அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகளில் இந்திய தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில் இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை அதிகாரியாக ஞானேஷ்குமார் சமீபத்தில் பதவியேற்றார். அவர் நாடு தழுவிய அளவில் அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அந்தக் கூட்டத்தில் பேசிய ஞானேஷ்குமார், மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சிகளிடம் தேர்தல் தொடர்பான பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்து தேர்தல் விதிகளின் அடிப்படையில் அவற்றை தீர்த்து வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
அதன்படி, தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் சென்னையில் இன்று (மார்ச் 24) அனைத்து அரசியல் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள பிரதான கட்டிடத்தின் 2வது மாடியில் உள்ள கூட்டரங்கில் மதியம் 3 மணியளவில் நடைபெற உள்ளது.
இதில் திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட 14 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக அறிவிக்கப்பட்டுள்ள நாதக, விசிக ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் முதல்முறையாக பங்கேற்கின்றனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வாக்குப் பதிவு இயந்திர முறைகேடுகள், போலி வாக்காளர்கள், 18 வயது எட்டியோரை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசிக்கப்படும் என்று கூறப்படுகிறது.