• Thu. May 2nd, 2024

அழகர் அணை திட்டம் நிறைவேற்றப்படும் : பிரேமலதா பேச்சு

ByBala

Apr 14, 2024

அனைவரும் கூட்டணி தர்மத்துடன் செயல்பட்டு தென்காசி தொகுதியில் போட்டியிடும் டாக்டர் கிருஷ்ணசாமியை வெற்றி பெற வைக்க வேண்டும் என ஸ்ரீவில்லிபுத்தூரில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா பேசினார்.

தென்காசி மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியை ஆதரித்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா சனிக்கிழமை இரவு ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது: 40 ஆண்டுகளாக தென்காசி தொகுதியில் வாழ்ந்த கிருஷ்ணசாமிக்கு உங்களின் தேவை என்ன என்பது தெரியும். தென்காசி தொகுதியில் கிருஷ்ணசாமி செய்ய வேண்டிய பணிகள் ஏராளமாக உள்ளது. கனிம வளங்கள் கேரளாவுக்கு கடத்தப்படுவது முற்றிலுமாக தடுத்து நிறுத்தப்படும்.

அழகர் அணை திட்டத்தை செயல்படுத்தவும், செண்பகவல்லி அணையை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். நான்கு வழிச்சாலை பணிகள் நிறைவடையும் வரை தற்காலிக ஏற்பாடாக மாற்றுப்பாதை ஏற்படுத்தப்படும். அதிமுக பொதுச்செயலாளர் பழனிச்சாமியின் வேண்டுகோளுக்கு இணங்க கூட்டணி தர்மத்தை மதித்து 40 தொகுதிகளுக்கும் சென்று பிரச்சாரம் செய்து வந்துள்ளேன். ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் அருளாலும், கேப்டன் விஜயகாந்த் ஆசியுடனும் போட்டியிடுகின்ற கிருஷ்ணசாமிக்கு அனைவரும் கூட்டணி தர்மத்துடன் செயல்பட்டு அவரை வெற்றி பெற வைக்க வேண்டும், இவ்வாறு அவர் பேசினார்.

அப்போது வேட்பாளர் கிருஷ்ணசாமி, முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *