சென்னைக்கு மும்பையில் இருந்து 164 பயணிகளுடன் வந்த ஏர் இந்தியா பயணிகள் விமானம், சென்னை விமான நிலையத்தில் தரை இறங்க முடியாமல் அரை மணி நேரம் வானில் தத்தளித்தன.
ரன்வேயில் இரண்டு முறை தரையிறங்க முயற்சித்து முடியாமல், மீண்டும், மீண்டும் வானில் பறந்து விட்டு, மூன்றாவது முறையாக தரையிறங்கியது.
விமானம் தரையிறங்க முடியாமல் ரன்வேயில், அசாதாரண சூழ்நிலை நிலவியதால், பயணிகள் பாதுகாப்புக்காக, விமானம் தாமதமாக தரையிறங்கியதாக, அதிகாரிகள் தகவல்.
ஏர் இந்தியா பயணிகள் விமானம், மும்பையில் இன்று காலை 9 மணிக்கு புறப்பட்டு, காலை 11 மணிக்கு, சென்னைக்கு வந்துவிட்டு மீண்டும் அந்த விமானம், காலை 11:45 மணிக்கு, சென்னையில் இருந்து மதுரைக்கு புறப்பட்டு செல்லும். அதைப்போல் ஏர் இந்தியா விமானம் இன்று காலை மும்பையில் இருந்து 164 பயணிகளுடன் புறப்பட்டு, சென்னை உள்நாட்டு விமான நிலையம் வந்து கொண்டு இருந்தது.
அந்த ஏர் இந்தியா பயணிகள் விமானம், சென்னை விமான நிலைய முதல் ரன்வேயில் தரையிறங்குவதற்காக, தாழ்வாகப் பறந்து தரையிறங்க முற்பட்டபோது, விமானம் ஓடுபாதையில் சரியாக பொருந்தாத காரணத்தால், உடனடியாக மீண்டும் மேல் நோக்கி பறந்தது. அதன் பின்பு சுமார் 10 நிமிடங்கள் கழித்து, மீண்டும் விமானம் அதே முதல் ரன்வேயில் தரையிறங்க முற்பட்டபோது, ஓடு பாதையில் மீண்டும் பிரச்சனை ஏற்பட்டதால், விமானம் இரண்டாவது முறையும் தரையிறங்காமல், விமானம் வானில் பறந்தது, அதன்பின்பு மூன்றாவது முறையாக காலை 11.30 மணிக்கு, சென்னை விமான நிலையத்தில் விமானம் பத்திரமாக தரையிறங்கியது.
சென்னை விமான நிலைய ரன்வேயில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, ஏர் இந்தியா பயணிகள் விமானம், சென்னையில் தரை இறங்க முடியாமல்,2 முறை முயற்சித்து, சுமார் அரை மணி நேரம் வானில் வட்டம் பறந்து, அதன்பின்பு மூன்றாவது முறையாக, சென்னை விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறங்கியது. இதனால் விமானத்தில் இருந்த 164 பயணிகள் சற்று அதிர்ச்சி அடைந்த நிலையில் காணப்பட்டனர். இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதன்பின்பு அந்த விமானம் சென்னையில் இருந்து மதுரைக்கு, இன்று பகல் 12.23 மணிக்கு, 107 பயணிகளுடன் புறப்பட்டு சென்றது.
இந்த சம்பவம் குறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் விசாரித்த போது, அந்த ஏர் இந்தியா விமானம், தரையிறங்க வந்த போது, ரன்வேயில் சாதகமான சூழ்நிலை இல்லாததால், இரண்டு முறை மேலே பறந்து விட்டு, அதன் பின்பு மூன்றாவது முறையாக பத்திரமாக தரையிறங்கியது. எங்களுக்கு விமானம் குறித்த நேரத்தில் தரை இறங்குவதை விட, விமானத்தில் இருக்கும் பயணிகளின் பாதுகாப்பு முக்கியமானது. மேலும் இதை போல் விமானம் தகுந்த சூழ்நிலை இல்லாத நேரங்களில், தரையிறங்காமல் வானில் உயரப் பறந்து, தகுந்த சூழ்நிலை ஏற்பட்ட பின்பு, தாமதமாக தரை இறங்குவது வழக்கமான ஒன்றுதான். எனவே இதில் எந்தவிதமான முக்கியத்துவமும் இல்லை. அதே நேரத்தில் இதனால் பயணிகளுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்று கூறுகின்றனர்.