• Tue. Nov 3rd, 2026

ரத்தவியல் வினாடி வினா போட்டியில் முதலிடம் பிடித்த மதுரை எய்ம்ஸ் மாணவர்கள்..,

ByKalamegam Viswanathan

Nov 3, 2026

மறைந்த பேராசிரியர் டாக்டர் ஜி. திலகவதி நினைவாக மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் தேசிய அளவிலான ரத்தவியல் வினாடி வினா போட்டி நடைபெற்றது. இதில் மதுரை எய்ம்ஸ் மாணவர்கள் முதலிடம்; தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி இரண்டாமிடம் பிடித்தனர்.

மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் மறைந்த பேராசிரியர் டாக்டர் ஜி. திலகவதி நினைவாக CASCADE 2026 என்ற தேசிய அளவிலான ரத்தவியல் (Hematology) வினாடி வினா போட்டி நடைபெற்றது.

மதுரை அரசு மருத்துவக் கல்லூரியின் நோயியல் துறையின் முன்னாள் தலைவராகப் பணியாற்றிய பேராசிரியர் டாக்டர் ஜி. திலகவதி, மருத்துவத் துறையில் சிறந்த நோயியல் நிபுணராகவும், கல்வியாளராகவும், அர்ப்பணிப்புடன் பணியாற்றிய ஆசிரியராகவும் விளங்கினார். மருத்துவக் கல்வியில் அவர் ஆற்றிய பங்களிப்பையும், மருத்துவ மாணவர்களுக்கு அவர் அளித்த ஊக்கத்தையும் நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் இந்தப் போட்டி நடத்தப்படுகிறது.

அதன்படி, 2026-ம் ஆண்டுக்கான CASCADE தேசிய அளவிலான வினாடி வினா போட்டி நவம்பர் 1-ம் தேதி நடைபெற்றது. இதில் நாடு முழுவதிலுமிருந்து மருத்துவக் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். போட்டியில் நேரடியாகப் பங்கேற்பதற்காக 129 அணிகள் பதிவு செய்திருந்த நிலையில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 106 அணிகள் பங்கேற்றன. மேலும், ஆன்லைன் வாயிலாக நடைபெற்ற வினாடி வினா போட்டியில் சுமார் 70 அணிகள் பங்கேற்றன.

போட்டியின் இறுதியில் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி முதலிடத்தைப் பிடித்தது. எம்பிபிஎஸ் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவி பிரியா சோனி, மாணவர் யாஷஸ்வி தன்வர் ஆகியோர் முதல் பரிசை வென்றனர். சென்னை மருத்துவக் கல்லூரி இரண்டாம் இடத்தையும், சிவகங்கை மருத்துவக் கல்லூரி மூன்றாம் இடத்தையும் பெற்றன.
வெற்றி பெற்ற அணிகளுக்கு மதுரை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் பேராசிரியர் டாக்டர் எல். அருள்சுந்தரேஷ் குமார் ரொக்கப் பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கினார். மேலும், பல்வேறு நிகழ்வுகளில் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் பங்கேற்றதற்காக திருநெல்வேலி மருத்துவக் கல்லூரிக்கு ஒட்டுமொத்தப் பங்கேற்புக்கான பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மதுரை மருத்துவக் கல்லூரியின் முன்னாள் மாணவரும், இதய மற்றும் நெஞ்சக அறுவை சிகிச்சைத் துறையின் முன்னாள் தலைவருமான டாக்டர் எஸ். ராஜேந்திரன், மறைந்த பேராசிரியர் டாக்டர் ஜி. திலகவதியின் கணவர் என்ற முறையிலும் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். போட்டியைச் சிறப்பாக நடத்துவதற்கு அவர் அளித்த ஊக்கமும் ஆதரவும் முக்கியப் பங்களிப்பாக அமைந்தது.

மதுரை அரசு மருத்துவக் கல்லூரியின் ரத்ததானக் கழகம், அஸ்ட்ரல் அகாடமிக் கிளப், வினாடி வினா மன்றம் மற்றும் ஆராய்ச்சி மன்றம் ஆகியவற்றைச் சேர்ந்த மாணவர்கள் இணைந்து இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர். நோய் எதிர்ப்பியல், ரத்தவியல் மற்றும் ரத்தமாற்றுத் துறையின் தலைவர் பேராசிரியர் டாக்டர் எம். சிந்தா வழிகாட்டுதலில் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மேலும், இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மாதிரி ஐக்கிய நாடுகள் சபை (Model United Nations – MUN) நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. இதில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் 17 மாணவர்கள் வெவ்வேறு நாடுகளின் பிரதிநிதிகளாகப் பங்கேற்றனர்.
சர்வதேசப் பிரச்சினைகள் தொடர்பான விவாதங்களில் மாணவர்கள் பங்கேற்று தங்களது அறிவுத்திறன், விமர்சனச் சிந்தனை, பேச்சாற்றல் மற்றும் ராஜதந்திரத் திறன்களை வெளிப்படுத்தினர்.

மருத்துவக் கல்வி, மாணவர்களின் தனித்திறன் மற்றும் அறிவுசார் செயல்பாடுகளை ஒருங்கிணைக்கும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி சிறப்பாக நிறைவடைந்தது.