பாஜகவோடு இணைந்து நீட் தேர்வை தமிழகத்திற்கு கொண்டு வந்த எடப்பாடி பழனிச்சாமியே நீட் தேர்வில் உயிரிழந்த 22 மாணவ, மாணவிகளுக்கு அதிமுக அஞ்சலி செலுத்துவது அரசியல் நாடகம் என்று திண்டுக்கல் மாவட்ட திமுக மாணவர் அணி சார்பில் மக்களுக்கு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது.
முன்னாள் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் ஆட்சியில் இருக்கும் போது நீட் தேர்வை தமிழகத்திற்கு கொண்டுவரக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தார். அதேபோல் கடந்த அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, தமிழகத்திற்கு நீட் தேர்வு வரக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் ஜெயலலிதா இறப்புக்கு பிறகு 2016 ஆம் ஆண்டு அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி பாஜகவுடன் கூட்டணி அமைத்து தனது பதவியை தக்க வைத்துக் கொள்வதற்காக தமிழகத்தில் நீட் தேர்வினை கொண்டு வந்தார். 2017 ஆம் ஆண்டு நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் மருத்துவராக முடியாது என்ற மன உளைச்சல் காரணமாக அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனிதா என்ற மாணவி முதன்முதலாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் நீட் தேர்வுக்கு பல்வேறு எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் நீட் தேர்வினால் பல மாணவ, மாணவிகள் உயிரிழந்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்பொழுது மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைத்திருக்கும் அதிமுக அரசியல் நாடகத்திற்காக நீட் தேர்வில் உயிரிழந்த மாணவ, மாணவிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியினை தமிழகம் முழுவதும் நடத்திக் கொண்டிருக்கிறது. இதில் அதிமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று கூறி வருகிறார். பாஜகவோடு கூட்டணி வைத்துக்கொண்டு எடப்பாடி பழனிச்சாமியே கையெழுத்திட்டு தமிழகத்திற்கு கொண்டு வந்த நீட் தேர்வினை, மீண்டும் பாஜகவோடு கூட்டணி வைத்துக்கொண்டு நீட் தேர்வை ரத்து செய்வதாக கூறி, இரட்டை வேடம் போட்டு வருகிறார்.

இதனை மக்களுக்கு தெரிவிக்கும் விதமாக திண்டுக்கல் மாவட்ட திமுக மாணவரணி சார்பில் “தன்னுடைய பதவியை காப்பாற்றிக் கொள்வதற்காக நீட் தேர்வை கொண்டு வந்து தமிழ்நாட்டு மாணவர்களை தற்கொலை செய்ய வைத்தவர் எடப்பாடி பழனிச்சாமி தான், நீட் தேர்வை கொண்டு வந்த பாஜக கூட கூட்டணி வைத்துக் கொண்டு நீட்டை எதிர்ப்பது என்பது அப்பட்டமான அரசியல் நாடகம்” என்று அச்சடிக்க பட்ட துண்டு பிரசுரங்களை திண்டுக்கல் மாநகராட்சியின் முக்கிய பகுதிகளிளும் திண்டுக்கல் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் திண்டுக்கல் மாநகரச் செயலாளர் ராஜப்பா தலைமையில் திமுக மாநில மாணவரணி துணைச் செயலாளர் ஈரோடு வீரமணி வீதி, வீதியாக நடந்து சென்று, இது குறித்த துண்டு பிரசுரங்களை மக்களுக்கு வழங்கி அரசியல் நாடகமாடும் அதிமுகவைப் பற்றியும், இரட்டை வேடம் போடும் எடப்பாடி பழனிச்சாமியைப் பற்றியும் விளக்கி கூறினர். இதேபோல் திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் திண்டுக்கல் புறநகர் பகுதிகளிலும் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் திமுக மாவட்ட கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர்கள், மாவட்ட துணை செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், பகுதி செயலாளர்கள், மாவட்ட மாநகர ஒன்றிய கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாணவர்களை சேர்ந்தவர்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
