• Tue. Feb 11th, 2025

அதிமுக வெற்றி பெற அக்னிசட்டி எடுத்து வேண்டிய கஞ்சாகருப்பு

Byவிஷா

Apr 10, 2024

வருகிற மக்களவைத் தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற வேண்டி, நகைச்சுவை நடிகர் கஞ்சாகருப்பு, சமயபுரம் மாரியம்மனுக்கு குடும்பத்துடன் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக் கடனை செலுத்தினார்.
பின்னர் எடப்பாடி பழனிசாமி அனைத்து மக்களவைத் தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என மனமுருகி வேண்டி, அக்னி சட்டியை அக்னி குண்டத்தில் இறக்கி வைத்தார். அதைத் தொடர்ந்து, குடும்பத்துடன் கோயிலுக்குள் சென்ற நடிகர் கஞ்சா கருப்பு, சமயபுரத்து மாரியம்மனை தரிசனம் செய்தார்.
நடிகர் கஞ்சா கருப்பு அக்னி சட்டியை ஏந்திச் செல்லும் வீடியோ ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தீச்சட்டியுடன் கோயிலைச் சுற்றி ஊர்வலமாக வந்த கஞ்சா கருப்பு, தீச்சட்டி இறக்கம் குண்டம் அருகே வந்த போது, “ஆத்தா மாரியாத்தா, எடப்பாடி ஐயா எல்லா தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும்” என வேண்டி தீச்சட்டியை அக்னி குண்டத்தில் எறிந்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், “அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்ததே பெரிய விஷயம். நடைபெற இருக்கின்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவினர் எல்லா தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற வேண்டும் என சமயபுரம் மாரியம்மனிடம் வேண்டி, குடும்பத்துடன் தீச்சட்டி, பால்குடம் உள்ளிட்ட நேர்த்திக்கடனைச் செலுத்தியுள்ளேன். மேலும், திருச்சியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என பிரார்த்தனை செய்து உள்ளேன்.