• Sat. May 11th, 2024

பாஜக எம்எல்ஏ-க்கள் அதிமுகவில் இணைவதாக அதிமுக எம்.எல்.ஏ அம்மன் அர்ஜுனன் பரபரப்பு தகவல்.

BySeenu

Feb 27, 2024

கோவை அண்ணா சிலை பகுதியில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான இதய தெய்வம் மாளிகையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் மற்றும் அதிமுக செய்தி தொடர்பாளர் கல்யாணசுந்தரம் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனனிடம் நேற்று அவிநாசி சாலையில் பாஜக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு அருகில் அவரது கார் நின்று கொண்டிருந்தது குறித்தும் அவர் அவ்வழியாகச் சென்றது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது, அதற்கு பதில் அளித்த அம்மன் அர்ஜுனன், அவிநாசி சாலை அனைவருக்கும் பொதுவான சாலை தானே எனவும், அவர்கள் அந்நேரத்தில் அங்கே இருப்பார்கள் என்று எனக்கு என்ன தெரியும் எனவும் நிகழ்ச்சி நடந்ததற்கு எதிர்ப்புறம் இருக்கும் வீடு எனது நண்பர் வீடு என பதிலளித்தார். மேலும் தான் எனது நண்பர் வீட்டில் இருந்து தான் வந்தேன் எனவும் தெரிவித்தார். இன்று மதியம் 2:15 மணிக்கு சேலத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் பாஜகவில் இருந்து 2 எம்எல்ஏக்கள் அதிமுகவில் சேர உள்ளதாக தெரிவித்தார். மேலும் இது சிரிப்புக்காக கூறவில்லை எனவும் உண்மை எனவும் அது கொங்கு மண்டலமாகவும் இருக்கலாம் தென்மண்டலமாகவும் இருக்கலாம் என தெரிவித்தார். மேலும் இந்தியாவிலேயே எந்த ஒரு கட்சியும் தனித்து நின்ற சரித்திரம் இல்லை என தெரிவித்த அவர் அதிமுக மட்டும் தான் அம்மா(ஜெயலலிதா) தலைமையில் 2014 ஆம் ஆண்டு தனித்து நின்று 37 இடங்களில் வெற்றி பெற்றதாக தெரிவித்தார். இந்த முறையோடு பாஜகவாக இருந்தாலும் சரி திமுகவாக இருந்தாலும் சரி எங்களை Bடீம் என்று கூறுகிறார்கள் ஆனால் பாஜகவின் உண்மையான B டீம் திமுக தான் என்றார். நான் இங்கு(அதிமுக) ராஜாவாக இருக்கிறேன் அப்படி இருக்கையில் நான் எதற்கு பாஜகவில் கூஜாவாக இருக்க வேண்டும் எனவும் கேள்வி எழுப்பினார். அங்கு(பாஜக) யாரேனும் பேரை சொல்ல முடியுமா, சட்டமன்ற உறுப்பினரை நாங்கள் உழைத்து உருவாக்கியுள்ளோம் ‘தில்’ இருந்தால் அவர்கள் ஜெயித்து காண்பிக்கட்டும். இந்த 40 பாராளுமன்ற தொகுதியில் ஒரு சீட்டை அவர்கள் ஜெயித்துக் காண்பிக்கட்டும். இது தென் மாநிலம் இங்கெல்லாம் அவர்கள் சலசலப்பிற்கு அதிமுக அஞ்சாது என்றார். மகாராஷ்டிராவில் ஏக் நாக் சிண்டே போல் ஒருவரை இங்கு உருவாக்கலாம் என்று அவர்கள் எண்ணுகிறார்கள் அதெல்லாம் இங்கு நடக்காது எனவும் அதிமுக தொண்டன் ஒருவரை கூட அவர்களால் அசைக்க முடியாது எனவும் தெரிவித்தார். அதிமுகவை நம்பித்தான் பலரும் வருவார்களே தவிர இங்கிருந்து யாரும் வெளியில் செல்ல மாட்டார்கள் எனவும் அவ்வாறு செல்லும் யாரும் உண்மையான அதிமுக காரராக இருக்க மாட்டார்கள் எனவும் ஒரு தாய் தந்தைக்கு பிறந்தவராகவும் இருக்க மாட்டார்கள் என தெரிவித்தார். அதிமுக வில் இருந்து யாரேனும் சென்று இருந்தால் அவர்கள் வயதானவர்களும் பயன்படாத ஆட்களும் தான் சென்று இருப்பார்கள் எனவும் தெரிவித்தார்.
சிறுபான்மை இன மக்களின் ஓட்டுக்கள் அதிமுகவிற்கு சென்று விடுமோ என்ற பயத்தினால் கள்ள உறவு எனக் கூறுகிறார்கள் எனவும் நீங்கள் எந்த உறவையும் நேர்மையாக செய்யவில்லை எனவும் கள்ள உறவிற்கு பெயர் போனதே உங்கள் கட்சி தான் எனவும் கடுமையாக சாடினார். வருகின்ற தேர்தலில் 40 தொகுதிகளையும் நாங்கள் வெல்வோம் எனவும் கூறினார். மேலும் பாஜக ஜெயித்தால் நான் அரசியலில் விட்டே விலகுகிறேன் எனவும் கூறினார். ஒரு சட்டமன்ற உறுப்பினரே அதிமுகவின் உழைப்பினால் தான் வெற்றி பெற்றார் எனவும் சட்டமன்றத் தேர்தலில் எனது தொகுதியை விட்டுவிட்டு அவர்கள் பக்கத்தில் தான் நின்றேன் எனவும் தெரிவித்தார். மேலும் கோவை மாவட்டம் அதிமுகவின் கோட்டை என தெரிவித்த அவர் பாஜக கோவையில் ஜெயிக்க வேண்டும் என்று கனவிலும் நினைத்துப் பார்க்கக் கூடாது என்றார். மேலும் உங்களுடைய(பாஜக) பித்தலாட்டத்தை உச்சநீதிமன்றம் தோலுரித்துக் காட்டியதாகவும் தெரிவித்தார். பெட்டியை மாற்றுகிறீர்கள், சீல் வைத்த பேப்பரை மாற்றுகிறீர்கள் அதற்குள் மூன்று கவுன்சிலர்களை விலைக்கு பேசுகிறீர்கள் இப்படிப்பட்ட கட்சி அதிமுகவை பார்த்து எம்எல்ஏ எங்கள் கட்சிக்கு வருகிறார் எனக் கூறுகிறார்கள். பஞ்சு மிட்டாய் கொடுத்து எம்எல்ஏக்களை வாங்கி விடலாம் என தேடிக் கொண்டிருக்கிறார்கள் என தெரிவித்த அவர் இங்கு பஞ்சுமிட்டாய்க்கும் வழியில்லை ஒரு டீ க்கு கூட வழியில்லாமல் போவார்கள் என சாடினார்.

முன்னதாக பேசிய கல்யாண சுந்தரம், கடந்த ஒரு வார காலமாகவே முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி குறித்தும், பிற அமைச்சர்கள் குறித்தும் மாவட்ட செயலாளர் குறித்தும் அவதூறு செய்திகளை பாஜகவும் திமுகவும் இணைந்து பரப்பிக் கொண்டிருப்பதாகவும், அவர்கள் பாரதிய ஜனதா கட்சியின் இணையப் போகிறார்கள் என்ற ஒரு வதந்தியை தொடர்ச்சியாக பரப்பி வருவதாக தெரிவித்தார். அதிமுக தொண்டர்களின் மன உறுதியை குறைக்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்திற்காக இது போன்ற புகைப்படங்களை பரப்பி வருவதாக தெரிவித்தார். நாங்கள் எங்கள் சாதனைகளை மக்களிடம் கூறி வாக்குகளை சேகரிக்க உள்ளதாக தெரிவித்த அவர் சாதனைகளை கூறி வாக்கு சேகரிக்க முடியாத இவர்கள் எந்த வித மக்கள் பணியில் செய்ய முடியாமல் இருக்கக்கூடிய திமுக பிஜேபி போன்ற கட்சிகள் இது போன்ற அதிமுக தொண்டர்களின் மனநிலையை குழப்பி வருவதாக தெரிவித்தார். மேலும் இது போன்ற செயல் அறமாற்ற தன்மையை குறிப்பதாகவும் தெரிவித்தார். மேலும் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி குறித்து வருகின்ற தகவல்கள் அயோக்கியத்தனமான ஒன்று எனவும் தெரிவித்தார். அறம் என்று ஒன்று இருந்தால் திமுகவும் பாஜகவும் இது போன்ற செயல்களை நிறுத்திக் கொள்ள வேண்டும் என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *