அதிமுக பொதுச்செயலாளரும் தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை 11:30 மணிக்கு ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றார் பிற்பகல் 2:15 மணி அளவில் டெல்லி சென்றடைவார்.
தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி எப்போது விமானத்தில் பயணம் செய்தாலும் முன்னதாகவே சென்னை விமான நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்படும். அதேபோல் அவரது கட்சி நிர்வாகிகளும் அவரது ஆதரவுகளும் சென்னை விமான நிலையத்திற்க்கு வந்து அவருக்கு வரவேற்பு அளித்து வழி அனுப்பி வைப்பார்கள்.

ஆனால் இன்று எடப்பாடி பழனிச்சாமி டெல்லி பயணம் குறித்து அவர்கள் கட்சி நிர்வாகிகளோ விமான நிலைய அதிகாரிகளுக்கு முன்கூட்டியே எந்த தகவலும் அளிக்கப்படவில்லை. திடீரென இன்று காலை 11:30 மணிக்கு டெல்லி செல்லும் ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் டிக்கெட் போடப்பட்டு திடீரென சென்னையில் டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமி வழக்கமாக விமானம் புறப்படுவதற்கு சுமார் அரை மணி நேரத்திற்கு முன்னதாக விமான நிலையத்திற்கு வருவார். அதைப்போல் இன்று காலை 10:45 மணிக்கு மேல் எடப்பாடி சென்னை விமான நிலையத்திற்கு வருவார் என்று எதிர்பார்த்துக் கொண்டு இருந்தனர். ஆனால் அவர் வழக்கத்துக்கு மாறாக இன்று காலை 10:20 மணிக்கெல்லாம் சென்னை விமான நிலையத்திற்குள் வந்து அவசரமாக உள்ளே சென்றுவிட்டார். அவருடன் அவருடைய பாதுகாப்பு அதிகாரி மட்டும் உடன் சென்றார், வேறு யாரும் செல்லவில்லை.
எனவே அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ரகசியமாக டெல்லி புறப்பட்டு சென்றிருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறி உள்ளது. எடப்பாடி பழனிச்சாமியின் இந்த திடீர் டெல்லி பயணம் தமிழ்நாட்டின் சட்டமன்ற தேர்தல் வர இன்னும் ஓராண்டு மட்டும் இருக்கும் நிலையில் மீண்டும் பாஜகவுடன் மீண்டும் கூட்டணி வைக்க பேச்சுவார்த்தை நடத்த சென்று உள்ளாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதற்கிடையே இரட்டை இலை வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதாலும் டெல்லியில் அதிமுக அலுவலகம் ஒன்று கட்டுமான பணி நிறைவடைய இருப்பதாலும் அது சம்பந்தமாகவும் டெல்லி சென்று இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.