உசிலம்பட்டி பேருந்து நிலைய பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரி, அதிமுக நகர் மன்ற உறுப்பினர்கள் ஆணையாளரிடம் கோரிக்கை மனு அளித்தனர். கால தாமதம் ஆகும் பட்சத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கையும் விடுத்தனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்ய கடந்த 2023 ஆம் ஆண்டு பேருந்து நிலையம் இடிக்கப்பட்டு புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.
ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமான ஒரு ஏக்கர் இடத்தை கையகப்படுத்தி, பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்யும் பணிகள் ஆமை வேகத்தில் கடந்த இரு ஆண்டுகளாக நடைபெறும் சூழலில், இன்று உசிலம்பட்டி நகராட்சி அலுவலகத்தில் அதிமுக நகர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் உசிலம்பட்டி அதிமுக நிர்வாகிகள் நகராட்சி ஆணையாளர் இளவரசன் – இடம் பேருந்து நிலைய பணிகள் விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய உசிலம்பட்டி அதிமுக நகர செயலாளரும், நகர் மன்ற உறுப்பினருமான பூமா ராஜா..,
உசிலம்பட்டி நகராட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக எந்த பணிகளும் முறையாக நடைபெறவில்லை என்றும், பேருந்து நிலைய விரிவாக்க பணிக்காக ஒரு ஏக்கர் நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக திமுகவினரே வழக்கு தொடுத்துள்ளதாகவும், திமுகவிலிருந்த முன்னாள் உசிலம்பட்டி நகர் மன்ற தலைவி அதிமுகவிற்கு சென்றதால் இந்த பணிகளை அப்படியே நகராட்சி நிர்வாகம் முடக்கி வைத்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும் தற்போது ஊராட்சி ஒன்றியத்தில் மக்கள் பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிவடைந்த சூழலில், நகராட்சி நிர்வாகத்தின், ஊராட்சி ஒன்றிய அலுவலர்களிடம் முறையிட்டு ஒரு ஏக்கரை கையகப்படுத்தி விரைவில் பேருந்து நிலைய பணிகளை முடிக்க வேண்டும் என்றும், கால தாமதம் ஆகும் பட்சத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் உத்தரவை பெற்று, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எச்சரிக்கை விடுத்ததோடு, ஆட்சி மாற்றம் வரும் போது இந்த பேருந்து நிலைய பணிகளை விரைந்து முடிப்போம் என பேட்டியளித்தார்.