சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகே கிளை செயலாளர் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய கோரி, சிவகங்கையில் அதிமுக எம்.எல்.ஏ தலைமையில் ஏராளமானோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பாச்சேத்தி அருகேவுள்ளது நாட்டார்குடி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் இவர் அந்த கிராமத்தில் மளிகைக்கடை நடத்தி வருவதுடன் அதிமுகவின் கிளைச் செயலாளராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை 5 மணியளவில் தனது கடையை திறந்து சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுவந்தபோது அங்குவந்த மர்ம நபர் ஒருவர் அவரை சராமாரியாக வெட்டிய நிலையில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து சம்பவ இடம் வந்த காவல்துறை அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த நிலையில் தகவல் அறிந்து அங்கு ஏராளமான அதிமுகவினர் குவிந்த நிலையில் அதிமுக எம்.எல்.ஏ செந்தில்நாதனும் மருத்துவமனைக்கு வந்ததுடன் உறவினர்களிடம் துக்கம் விசாரித்ததுடம் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி அதிமுக எம்.எல்.ஏ செந்தில்நாதன் தலைமையில் ஏராளமானோர் திரண்டு மருத்துவமனை நுழைவு பகுதியில் உள்ள தஞ்சாவூர் மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து அங்குவந்த துனை கண்காணிப்பாளர் அமலா அட்வின் தலைமையிலான குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்ததுடன் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.








