மத்திய அரசால் பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் விவசாயிகளுக்கு ஆண்டு தோறும் ரூபாய் 6,000 நேரடியாக அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இதற்காக மத்திய அரசால் விவசாயிகளுக்கு தனிப்பட்ட அடையாள எண் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த அடையாள எண் பெறாத விவசாயிகளுக்கு தவணைத்தொகை வழங்கப்படுவது நிறுத்தப்படும் என ஒரு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் 23 ஆயிரத்து 33 விவசாயிகள் பிரதமர் கிசான் திட்டத்தின்கீழ் பயன்பெற்று வருகின்றனர். இவர்களில் 17ஆயிரத்து 364 விவசாயிகள் மட்டுமே அடையாள எண் பெற்றுள்ளனர். மீதமுள்ள 5 ஆயிரத்து 669 விவசாயிகள் வேளாண் அடையான எண் பெறாமல் உள்ளனர். இவர்கள் வருகிற ஜூன் 30-ந்தேதிக்குள் வேளாண் அடையாள எண் பெற்றால் மட்டுமே பிரதமா கிசான் மற்றும் பயிர்க்காப்பீடு திட்ட பலன்கள் கிடைக்கும்.

எனவே இது வரை அடையாள எண் பெறாத விவசாயிகள் தங்கள் நில ஆவணங்கள், ஆதார் அடையாள அட்டை, ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட செல்போன் எண்ணுடன் அருகில் உள்ள பொது சேவை மையத்திலோ அல்லது வேளாண்மை விரிவாக்க பணியாளரையோ அணுகி பதிவு செய்து அடையாள எண் பெற்று தொடர்ச்சியாக பயன் அடையலாம் என வேளாண்மை இணை இயக்குனர் சத்தியம் தொலைக்காட்சிக்கு பிரத்தியேக பேட்டி அளித்துள்ளார்.