அதிமுக முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா சமீபத்தில் திமுகவில் இணைந்துள்ள நிலையில், இன்று (ஆகஸ்டு 13) அதிமுகவின் மூத்த பிரமுகரான டாக்டர் மைத்ரேயன் திமுகவில் இணைகிறார் என்கின்றன அறிவாலய வட்டாரங்கள்.
ஆர்எஸ்எஸ் உறுப்பினராக பொதுவாழ்வைத் தொடங்கிய டாக்டர் மைத்ரேயன் பிராமண சமுதாயத்தைச் சேர்ந்தவர்.
தமிழக பாஜக செயற்குழு உறுப்பினர், பொதுச் செயலாளர், துணைத் தலைவர் பதவிகளை வகித்த மைத்ரேயன் 1999-2000 ஆண்டில் தமிழக பாஜக தலைவராகவும் இருந்தவர்.
அதன் பின் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். 2001 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட மைத்ரேயன் வெற்றி வாய்ப்பை இழந்தார். ஆனால் ஜெயலலிதாவோ அவரை 2002 இல் மாநிலங்களவை உறுப்பினராக டெல்லிக்கு அனுப்பினார். அதிமுக சார்பில் மூன்று முறை ராஜ்யசபா உறுப்பினராக இருந்தார் மைத்ரேயன்.
ஜெயலலிதா காலமான பின் ஓ.பிஎஸ். அணியில் இருந்த மைத்ரேயன், அதன் பிறகு இபிஎஸ், ஒபிஎஸ் என மாறி மாறி பயணித்தார். கடந்த செப்டம்பர் 2024 இல் எட்பபாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவுக்குத் திரும்பினார்.
இப்படி ஆர்.எஸ்.எஸ், அதிமுக பாரம்பரியம் கொண்ட மைத்ரேயன் இன்று (ஆகஸ்டு 13) முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைகிறார்.