• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

தமிழக சட்டப்பேரவை கூட்டம்- அதிமுக, பாஜக வெளிநடப்பு!

ByP.Kavitha Kumar

Mar 14, 2025

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தில் இருந்து அதிமுக, பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

தமிழக நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்தார். அவர் நிதிநிலை அறிக்கையை வாசித்துக் கொண்டிருக்கும் போது, டாஸ்மாக் மதுபானத்தில் பல ஆயிரம் கோடி ஊழல் நடந்திருப்பதாக அதிமுக, பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதுடன் வெளிநடப்பு செய்தனர்.

இதன்பின் சட்டப்பேரவைக்கு வெளியே அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில்,” எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது ஸ்டாலின், அப்போதைய சட்டப்பேரவை தலைவர் தனபாலை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்று கூறிய கோரிக்கையை சட்டமன்ற விதிகளின்படி விவாதத்துக்கு எடுத்துக் கொண்டோம். அதேபோல், தற்போது அதிமுக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் கொண்டு வந்துள்ள சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவுவை பதவி நீக்க கோரிக்கை திமுக அரசு விவாதத்துக்கு எடுத்திருக்க வேண்டும். ஆனால், அதை அவர்கள் ஏற்க மறுத்துவிட்டனர்.

கடந்த ஒருவார காலமாக டாஸ்மாக் தலைமை அலுவலகம் மற்றும் இதர அலுவலகங்களிலும் அந்த நிறுவனத்துக்கு மதுபானங்கள் விநியோகம் செய்யும் மதுபான தயாரிப்பு தொழிற்சாலைகளிலும் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டது. அதன் அடிப்படையில், அமலாக்கத்துறை நேற்று செய்தி ஒன்றை வெளியிட்டது. டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடிக்கு மேல் முறைகேடு நடந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த விசாரணை முடியும்போது, இந்த டாஸ்மாக் நிறுவனத்தின் மூலமாக சுமார், கிட்டத்தட்ட 40,000 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றிருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது.

இந்த அரசு அதுகுறித்து இதுவரை இன்னும் எந்தவொரு செய்தியையும் வெளியிடவில்லை. அமலாக்கத்துறை சோதனை நடத்தி, அந்த சோதனை மூலம் ஆயிரம் கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்துள்ளதாக அறிவித்த பிறகும், இந்த அரசு எந்த செய்தியும் வெளியிடாத காரணத்தால், இதற்கு தார்மீக பொறுப்பேற்று இந்த திமுக அரசு ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்திருக்கிறோம்” என்றார்.
முன்னதாக, சட்டசபை தொடங்குவதற்கு முன்பு எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.