• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மாட்டுக்கறி வீச முயன்ற ஆதித்தமிழர் கட்சியினர் கைது

BySeenu

Jan 13, 2025

கோவையில் பீப் உணவுக்கடை விவகாரத்தில், தம்பதியினரை மிரட்டிய பாஜக நிர்வாகியை கைது செய்யகோரி, பாஜக மாவட்ட அலுவலகத்தின் மீது மாட்டுக் கறி வீச முயன்ற ஆதித்தமிழர் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.

கோவை கணபதி அடுத்த உடையாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ரவி ஆபீதா தம்பதியினரை, ஊர்கட்டுப்பாடு எனவும் பீப் உணவுக்கடை நடத்தக்கூடாது என பாஜக ஓபிசி பிரிவு மாவட்ட செயலாளர் சுப்ரமணி என்பவர் மிரட்டிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதற்கு பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்த நிலையில், ரவி ஆபிதா தம்பதியினர் இது தொடர்பாக போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் சுப்ரமணி மீது நான்கு பிரிவுகளுக்கு வழக்குப்பதிவு செய்தனர். இதற்கு பாஜக கண்டனம் தெரிவித்த நிலையில், சுப்ரமணிக்கு ஆதரவாக பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பீப் உணவுக்கடை விவகாரம் பெரும் சர்ச்சைக்குள்ளான நிலையில்,பாஜகவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சுப்ரமணியை கைது செய்யக்கோரியும் ஆதித்தமிழர் கட்சியினர் கோவை மாவட்ட பாஜக அலுவலகத்தின் மீது மாட்டுக் கறி வீசும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சித்தாபுதூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து நடந்து சென்ற ஆதித்தமிழர் கட்சியினர் பாஜக அலுவலகத்தை நோக்கி வந்தனர். அப்போது ஏற்கனவே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரை கண்டு சாலையில் மாட்டுக்கறியை விசீ எறிந்த போராட்டக்காரர்கள், பிரதமர் மோடி மற்றும் யோகி ஆதித்யநாத் படங்களை சாலையில் போட்டு மிதித்தது போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மாட்டுக்கறி எங்களது உரிமை, சுப்ரமணியை கைது செய்ய வேண்டும் என கோஷங்களை எழுப்பி அவர்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற ஆதித்தமிழர் கட்சியைச் சேர்ந்த ஐந்து பேரையும் போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.