• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

பிக்பாஸ் பிரபலமாக உதவாது நடிகை ரேகா மனம்திறந்த பேச்சு

மறைந்த திரைப்பட இயக்குநரும், பாடலாசிரியருமான எம்.ஜி.வல்லபனின் பேத்தியான ஆதிரா பிரகாஷின் நடன அரங்கேற்றம் சென்னை வாணி மஹாலில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் நடிகை ரேகா கலந்து கொண்டு ஆதிராவை வாழ்த்திப் பேசினார்.அப்போது அவர் பேசும்போது, “இந்தக் கொரோனா காலகட்டத்தில் வெளியே செல்லாதீர்கள் என்று ரொம்பவே பயமுறுத்துகிறார்கள். நானும் வெளியில் செல்லாமல்தான் இருந்தேன். அப்படிப்பட்ட சூழலில் இங்கே வந்ததற்காக நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்; பெருமைப்படுகிறேன்.
இந்த அரங்கம் முழுமையாக நிரம்பி இருக்க வேண்டும். இந்தக் கொடிய தொற்றுக் காலத்தில் இவ்வளவு பேர் வந்திருந்ததில் மகிழ்ச்சி. நான் பரத நாட்டிய நிகழ்ச்சிகள் உட்பட நிறைய நிகழ்ச்சிகளுக்குச் சென்றிருக்கிறேன்.
நீங்கள் நீண்ட நேரம் சிரித்துக் கொண்டிருந்தால் பார்க்க அழகாக இருக்காது. ஆனால் அவள் ஆரம்பத்திலிருந்து கடைசிவரை புன்னகை புரிந்து கொண்டே இந்த நடனத்தை ஆடினாள். கொஞ்சம் கூட அவளது ஆற்றலின் அளவு குறையவில்லை.அப்படிச் சிரித்துக் கொண்டே ஆடிய நடனம் அவ்வளவு அருமையாக இருந்தது. அதை நான் மிகவும் ரசித்துப் பார்த்தேன்.ரசிக்க ரசிக்கத்தான் கலைஞர்கள் வளர்வார்கள். நாம் வளர வேண்டுமென்றால் நம்மை யாராவது ஊக்கப்படுத்தி, தூண்டுதலாக இருக்க வேண்டும்
துளிக்கூட பதற்றமில்லாமல் சலனமில்லாமல் சபையை கவர்ந்து கொண்டு முழு நம்பிக்கையுடன் அவள் ஆடிய நடனம் மிகப் பிரமாதம். இசைக் குழுவினரும் ஒரு துளியளவு கூட பிழை நேராமல் துல்லியமாகப் பாடி அவள் நடனத்தை உயர்த்திப் பிடித்தார்கள்.பெண்கள் ஏதாவது கலைகளைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று இங்கே ‘நர்த்தகி’ நடராஜ் அவர்கள் பேசினார்கள். நானும் கே.ஜே.சரசம்மாவிடம் நடனம் கற்றுக் கொள்ளப் போனேன். மூன்று, நான்கு மாதங்கள்தான் போயிருப்பேன்.
அலாரிப்பு’வரை போனேன். அதன் பிறகு ‘அரை மண்டியில் உட்கார்’ என்றார்கள். எங்கே ‘அரை மண்டி’யில் உட்கார்வது? அதற்குமேல் படங்களில் பிசியாகி விட்டேன். படங்களில் கிளிசரினைக் கொடுத்து அழுகை கதாநாயகியாகவே தொடர்ந்து நடிக்க வைத்து விட்டார்கள்.
பரத நாட்டியம் கற்றுக் கொள்ளும்போது நாம் ஒரு சிற்பமாக மாறிவிடுவோம். அதில் சிறு தவறு ஏற்பட்டாலும் எல்லாமே வீணாகிவிடும். நான் படங்களில் தொடர்ந்து நடித்ததால் ‘அலாரிப்பு’டன் என் நடனப் பயிற்சி முடிந்தது. அந்த நடனத்தைத் தொடர முடியவில்லை. நீண்ட நாள் கழித்து அந்தப் பழைய நினைவுகள் இப்போது எனக்கு வந்து விட்டன. நமக்குத் தட்டிக் கொடுக்கவும் ஊக்கப்படுத்தவும் யாராவது ஒருவர் உடன் இருந்து கொண்டே இருக்க வேண்டும்.
என் மகள் நியூயார்க்கில் படித்து முடித்துவிட்டு இப்போது வேலையில் சேர்ந்திருக்கிறாள். அங்கே மகளைத் தனியே விட்டுவிட்டு சுமார் ஒன்றரை ஆண்டுகளாக விசா கிடைக்காமல் நாங்கள் கணவன், மனைவி மட்டும் இங்கே தனியே இருப்பது வருத்தமாக உள்ளது.
சரி… ஒரு பதினைந்து நாள் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்குப் போய்விட்டு வரலாம் என்று நினைத்தேன். ‘பிக்பாஸில்’ நடப்பது உண்மையா பொய்யா என்று தெரிந்து கொள்ளலாம் என்று ஒரு பதினைந்து நாள் போய்விட்டு வந்தேன். அது முடிந்தவுடன் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சிக்குப் போய்விட்டு வந்தேன்.
‘பிக்பாஸில்’ அந்த நூறு நாட்களும் சூழல்களைத் தூண்டிவிட்டு ஒரு பரபரப்பை உருவாக்குவார்கள். உதாரணமாக சனமாக இருக்கட்டும்; வேறு யாராகவும் இருக்கட்டும். “நான்தான் சமைக்கிறேன் என்று சொன்னேனே…?” என்று சண்டை போடுவதுவரை பாருங்கள். அதுதான் மக்களுக்குப் பிடிக்கிறது. எனவேதான் சண்டை போடும் சூழ்நிலைகளை அங்கே உருவாக்குகிறார்கள். அடிக்கடி சண்டைகள் நடக்கும். வெள்ளிக்கிழமை மீண்டும் சேர்ந்து கொள்வார்கள். சனி, ஞாயிறு மாறி விடுவார்கள். இப்படியே போய்க் கொண்டிருக்கும்.‘பிக் பாஸ்’ மூலம் ஒரு நூறு நாட்கள்தான் பிரபலமாக இருக்க முடியும். ‘பிக் பாஸ்’ மூலம் யாரும் ஸ்டார் ஆக முடியாது. ஆனால், வாழ்க்கையில் நிறைய கற்றுக் கொள்ளலாம். அங்கே போன் கிடையாது, பேப்பர் கிடையாது, யாரும் சொல்லிக் கொடுப்பதில்லை. இந்த நிலையில் பொறுமையாக இருந்துதான் நம்மை யார் என்று காண்பிக்க வேண்டும். நான் அங்கேயிருந்த 15 நாட்களும் பொறுமையாகத்தான் இருந்தேன்.எதையாவது சாதித்த பிறகுதான் மிகவும் அர்ப்பணிப்புடன், பொறுமையாக இருக்க வேண்டும் என்று நான் அடிக்கடி சொல்வேன். நான் நடித்த படங்களில் எல்லாம் படப்பிடிப்புகளுக்குச் சரியான நேரத்தில் சென்று, பொறுமையாக இருந்ததால்தான் இதை என்னால் செய்ய முடிந்தது. பொறாமை எண்ணங்களோ, கர்வமோ நமக்குள் இருக்கக் கூடாது.
‘நான் இவ்வளவு பெரிய ஆள், நான் ஏன் 17 பேருக்குச் சமைத்துக் கொடுக்க வேண்டும்?’ என்றெல்லாம் நினைக்கக் கூடாது. அதையெல்லாம் நான் நினைக்காமல் அந்த வாழ்க்கையை உற்று நோக்கிப் பார்த்தேன்.நாம் எப்போதும் சும்மா இருக்கக் கூடாது இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும்.
அது போல எப்போதும் நம்முடைய நம்பிக்கையைக் கைவிடக் கூடாது. கண்ணாடியில் பார்த்து நம்முடைய அழகையும் பராமரிக்க வேண்டும். அதுதான் நமது பலம். எப்போதும் என்னை நான் இளமையாகவே உணர்வேன்.பெற்றவர்கள் எந்த ஒரு விஷயத்தையும் பிள்ளைகளிடம் தாங்கள் இஷ்டப்பட்டதைத் திணிக்கக் கூடாது. பிள்ளைகளிடம் தானாகக் கற்றுக் கொள்ள விருப்பம் வர வேண்டும். ஆதிராவின் பெற்றோர்கள் அவளை நன்றாக ஊக்கப்படுத்தி இருக்கிறார்கள். அவர்களுக்கு எனது பாராட்டுக்கள்.. என்று கூறி வாழ்த்தினார்.