மாண்புமிகு மன்னராட்சி முதலமைச்சர் அவர்களே என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விமர்சனம் செய்து தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் பேசினார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் இன்று நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து 1800-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த பொதுக்குழுக் கூட்டத்தில் தவெக தலைவர் நடிகர் விஜய் சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், “ என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கும், தோழிகளுக்கும் வணக்கம்.. கதறல் சத்தம் எல்லாம் எப்படி இருக்கிறது? ஒவ்வொரு குடும்பமும் வாழ் வேண்டும் என்பது நல்ல அரசியலா?.; இல்லை ஒரு குடும்பம் மட்டும் வாழ வேண்டும் என்பது நல்ல அரசியலா?. மாநாட்டில் இருந்து தற்போது வரை இடையூறு வந்து கொண்டு தான் இருக்கிறது. எத்தனை தடைகள் வந்தாலும் தவெக முன்னேறி செல்லும். ரசிகர்கள், தொண்டர்களுக்கு தடை போட நீங்கள் யார்?.
மாண்புமிகு மன்னராட்சி முதலமைச்சர் அவர்களே,. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே, பெயரை மட்டும் வீராப்பாக சொன்னால் மட்டும் போதாதே முதலமைச்சர் அவர்களே. மக்கள் விரோத ஆட்சியை, மன்னராட்சி போல செய்கிறார்கள். கேள்வி கேட்டால் கோபம் வருகிறது.. விமர்சித்தால் மட்டும் கோபப்படுகிறார் முதலமைச்சர். உங்கள் ஆட்சிக்கு பெண்கள் முடிவு கட்ட போகிறார்கள்.
நாம்தான் 2026 தேர்தலில் ஆட்சியை அமைக்கப் போகிறோம். நமது ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பை நூறு சதவீதம் உறுதி செய்வோம். சட்டம் ஒழுங்கை ஸ்ட்ரிக்டா வைச்சிருப்போம். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போக்குவரத்து ஊழியர்கள், மின்சார வாரிய ஊழியர்களுக்கு துணையாக இருப்போம். ஏனென்றால் நாம் எப்போதும் உழைப்பவர்கள் பக்கம்தான். விவசாயிகளை ப்பாதிக்கும் திட்டங்களை கடுமையாக எதிர்ப்போம்.
வரும் 2026-ம் ஆண்டு மாபெரும் அரசியல் மாற்றத்தை கொண்டுவர உறுதியாக இருக்கிறோம். அதைத் தடுக்க சில பேர் பகல் கனவு காண்கிறார்கள். காற்று, மழை, வெயில் போல எம் மக்களுக்கான அரசியலையும் யாராலும் தடுக்க முடியாது. அரசியல் சூறாவளி, தேர்தல் சுனாமியை யாராலும் தடுக்க முடியாது. பார்த்துக்கிட்டே இருங்க…இதுவரை சந்திக்காத ஒரு தேர்தலை தமிழ்நாடு அடுத்த வருடம் சந்திக்கும். இரண்டே இரண்டு பேருக்கு நடுவில்தான் போட்டியே. ஒன்று டிவிகே,. இன்னொன்று டிஎம்.கே. நம்பிக்கையா இருங்க வெற்றி நிச்சயம்” என்று முடித்தார் விஜய்.