• Wed. Feb 8th, 2023

நடிகர் சிவகுமாரின் ‘திருக்குறள் 100’ உரை ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது

Byதன பாலன்

Jan 10, 2023

நடிகர் சிவகுமார் கடந்த 20 ஆண்டுகளாக திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்ட நிலையில் தமிழ் மொழிக்கும், தமிழகத்திற்கும், தமிழ் மக்களுக்கும் பயனுறும்வகையில் தனது வாழ்க்கைப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறார்.
கிடைத்திருக்கும் இந்த ஓய்வு நேரங்களில் ‘கம்பராமாயணம்’, ‘மகாபாரதம்’ போன்ற இதிகாசங்களை மக்களுக்கு எளிய வகையில் புரிவதைப் போல தொடர்ச்சியாக 4 மணி நேரத்தில் எடுத்துரைத்தார். இந்த சொற்பொழிவுகளும், விளக்கவுரையும் வீடியோ வடிவிலும், எழுத்து வடிவிலும் வெளியாகி விற்பனையில் சாதனை படைத்து வருகிறது.
இதன் தொடர்ச்சியாக சென்ற ஆண்டு ஈரோட்டில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் ‘திருக்குறள் 100’ என்ற தலைப்பில் 4 மணி நேரம் உரை நிகழ்த்தியதோடு அல்லாமல், அதை நூலாகவும் எழுதி வெளியிட்டிருக்கிறார்.
100 திருக்குறள்களை எடுத்துக் கொண்டு அதற்கு ஏற்ற பொருத்தமான வாழ்க்கையை வாழ்ந்த தான் அறிந்த சிறந்த மனிதர்களின் அனுபவங்களை இணைத்து ‘வள்ளுவர் வழியில் வாழ்ந்தவர்களின் வரலாற்றுடன் குறள்’ என்கிற பார்வையில் நடிகர் சிவக்குமார் பேசிய அந்த உரை, ஈரோட்டை மட்டுமல்ல ஒட்டு மொத்த தமிழகத்தையும் பேச வைத்துள்ளது.இதுவரை திருக்குறளுக்கு வார்த்தைகள் வடிவில் மணக்குடவர், பரிமேலழகர் முதல் கலைஞர், சாலமன் பாப்பையாவரை ஏராளமான பேர் உரை எழுதியிருக்கிறார்கள். அந்த வகையில் சிவகுமார், வள்ளுவர் வழி நின்று வாழ்ந்த, தங்களை அறியாமலேயே குறளின் வழியே சென்ற மனிதர்களின் வாழ்க்கையின் வழியே இந்த உரையை பேசியுள்ளார்.
‘வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு’ என்ற குறளில் தொடங்கி 100-வது கதையாக மலக் குழிகளில் இறங்கி உயிர்விடும் அப்பாவி துப்புரவுத் தொழிலாளியின் கதைவரையிலும் கூறி ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று அதற்குரிய குறளைக் கூறி நிறைவு செய்துள்ளார்.பெரும் வரவேற்பை பெற்ற இந்த ‘திருக்குறள் 100’ சிறப்பு நிகழ்ச்சியாக ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியில் பொங்கல் திருநாளில் தொடங்கி காணும் பொங்கல்வரை தொடர்ந்து 3 நாட்கள் (15.1.23,16.1.23, 17.1.23) ஞாயிறு, திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய நாட்களில் பிற்பகல் 3 மணிக்கு ஒளிபரப்பாகிறது.இதனையொட்டி நடிகர் சிவகுமார் பத்திரிக்கை, ஊடக நண்பர்களைச் சந்தித்தார்.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் சிவக்குமார் பேசியவற்றில் 50 குறள்களின் பேச்சுக்கள் பத்திரிகை நிருபர்களுக்காக ஒளிபரப்பு செய்யப்பட்டது. எந்தவிதக் குறிப்பும் இல்லாமல், தங்கு தடையின்றி மிக எளிய தமிழில், பாமரனுக்கும் புரியும்படியான மொழியில் கதைகளுக்கேற்ற உச்சரிப்புடன் நடிகர் சிவகுமார் பேசியவிதம் அனைவரையும் கவர்ந்திழுத்தது.இந்த நிகழ்ச்சியில் நடிகர் சிவகுமார் பேசும்போது, “கடந்த 40 ஆண்டுகளாக திரைப்படங்களில், நாடகங்களில், சின்னதிரையிலும் நான் பணியாற்றினேன். என் 64-வது வயதில் இனி மேக்கப் போட்டு நடிப்பதில்லை என்று முடிவெடுத்தேன். பின்னர் தமிழ் இலக்கியத்தின் பக்கம் என் கவனம் திசை திரும்பியது.அப்படி என்னை திசை திருப்பியவர் எழுத்தாளர் ஸ்டாலின் குணசேகரன். அவர் கடந்த 18 ஆண்டுகளாக ஈரோடு புத்தக விழாவை எந்தவிதமான நுழைவுக் கட்டணமும் இல்லாமல் நடத்தி வருகிறார். அவர்தான் என்னை மேடைப் பேச்சுக்கு அழைத்து வந்தவர்.


‘கம்பராமாயண’த்தின் மொத்தக் கதையையும் 100 பாடல்கள் வழியாக விளக்கிப் பேசிய முதல் மனிதர் நான்தான் என்று இப்போது கூறுகிறார்கள். அதில் எனக்கும் மிகப் பெரிய மகிழ்ச்சிதான். அதேபோல் ‘மகாபாரத’த்தை 2 மணி10 நிமிடங்களில் விளக்கிப் பேசினேன்.. இவையெல்லாம் இப்போது யூ டியூப் தளத்தில் கிடைக்கிறது.இப்போது திருக்குறளைப் பேசியிருக்கிறேன். இதில் இறங்க வேண்டாம் என்று பலரும் முதலில் பயமுறுத்தினார்கள். ஆனால் விடாமுயற்சியோடு கிட்டத்தட்ட மூன்றரை வருடங்கள் ஆராய்ச்சி செய்து இந்த திருக்குறள் கதைகளைப் பேசியுள்ளேன்.
இப்போது இதை ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சி வரும் பொங்கல் திருநாளில் ஒளிபரப்புகிறார்கள். அனைவரும் இதைப் பார்த்து திருக்குறளையும், திருக்குறள் வழி வாழ்ந்த நமது முன்னோர்களையும், சக மனிதர்களும் புரிந்து கொண்டு அதேபோல் தங்களது வாழ்விலும் நெறி பிறழாமல் வாழ்ந்து பயன் பெற வேண்டும்…” என்றார்.

“தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்

தோன்றலின் தோன்றாமை நன்று” – என்கிற வள்ளுவரின்குறளுக்கு எடுத்துக்காட்டாய் திகழும் நடிகர் சிவகுமார், திரையுலகில் மட்டுமன்றி தமிழ்ச் சமூகத்துக்கே ஒரு முன்னுதாரணமாய் திகழ்கிறார் என்பதில் சந்தேகமில்லை..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *