பரந்தூர் மக்களைச் சந்தித்த தவெக தலைவர் விஜய்யின் புகைப்படத்தை இன்ஸ்டா ஸ்டோரியில் வெளியிட்டு கூத்தாடி என நடிகர் சிபிராஜ் சத்யராஜ் பதிவிட்டு வைரலாகி வருகிறது.
காஞ்சிபுரத்தை அடுத்து உள்ள பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் 900 நாட்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். பரந்தூர் பசுமை விமான நிலையத்திற்காக விவசாய நிலங்களை அரசு கையகப்படுத்தக் கூடாது என்று வலியுறுத்தி தங்கள் எதிர்ப்பை அவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய், பரந்தூர் மக்களை நேற்று நேரில் சந்தித்து பேசினார். வாகனத்தில் இருந்தபடியே மக்கள் மத்தியில் பேசினார். அப்போது பரந்தூர் விமான நிலைய திட்டம் குறித்து மத்திய,மாநில அரசுகள் மறுஆய்வு செய்ய வேண்டும் என்பதே என் கோரிக்கை. பரந்தூர் மக்களுக்கு நானும்,என் கட்சியினரும் உறுதுணையாக இருப்போம்.என் கள பயணம் பரந்தூரில் இருந்து துவங்குகிறது என்று பேசினார்.
கட்சி துவங்கி ஓராண்டு காலமாக விஜய் ஏன் பரந்தூர் பக்கம் செல்லவில்லை?. இத்தனை நாட்களாக என்ன செய்து கொண்டிருந்தார் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்த நிலையில், விஜய் பரந்தூரில் மக்கள் மத்தியில் பேசிய புகைப்படத்தை இன்ஸ்டா ஸ்டோரியில் வெளியிட்டு கூத்தாடி என கேப்ஷன் வெளியிட்டிருக்கிறார் நடிகர் சிபிராஜ் சத்யராஜ். இதைப் பார்த்த தவெக தொண்டர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் சத்யராஜின் மகனான சிபி தற்போது இயக்குநர் இளையராஜா கலியபெருமாள் இயக்கிய டென் ஹவர்ஸ் என்ற படத்தில் நடித்துள்ளார். இவர் ஏற்கனவே ஸ்டூடண்ட் நம்பர் 1, ஜோர்,மண்ணின் மனிதன், வெற்றிவேல் சக்திவேல், கோவை பிரதர்ஸ், லீ, நாணயம், நாய்கள் ஜாக்கிரதை, போக்கிரி ராஜா, ஜாக்சன் துரை உள்பட பல படங்களில் நடித்துள்ளார். சிபி சத்யராஜ் இன்ஸ்டா ஸ்டோரிக்கு விஜய் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.





