

கன்னட திரையுலகில் முன்னணி கதாநாயகனாக இருந்து வந்த நடிகர் புனித் ராஜ்குமார் கடந்த ஆண்டு திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மரணம் அடைந்தார். புனித் ராஜ்குமார் மறைவுக்கு பின், அவர் செய்து வந்த சமூக சேவைகள் நாடு முழுவதும் பேசப்படுகிறது.
இந்நிலையில், மைசூரு பல்கலைக்கழக 102-வது பட்டமளிப்பு விழாவில், நடிகர் புனித் ராஜ்குமாருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. புனித்துக்கான கவுரவ டாக்டர் பட்டத்தை, அவரது மனைவி அஸ்வினியிடம் கவர்னர் தாவர்சந்த் கெலாட் வழங்கினார்.

இதன் பின்னர் அஸ்வினி பேசுகையில், “அடுத்த ஆண்டு முதல், கலை பிரிவில் புனித் ராஜ்குமார் பெயரிலும், வணிக மேலாண்மை பிரிவில் பர்வதம்மா ராஜ்குமார் பெயரிலும் இரண்டு தங்கப் பதக்கம் வழங்கப்படும்” என்றார். பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பின் முன்னாள் இயக்குநரும், ‘பத்ம விபூஷன்’ விருது பெற்றவருமான டாக்டர் வாசுதேவ் கே.ஆட்ரே, நாட்டுப்புறக் கலைஞர் மலவள்ளி மகாதேவ சுவாமி ஆகியோருக்கும் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
