வி.எல்.பி.கல்லூரி சார்பாக, பள்ளி ஆசிரியர்களுக்கு ஆச்சார்யா விருது மற்றும் உயர்வுக்கு படி திட்டத்தின் கீழ், பள்ளி மாணவர்களுக்கு உயர் கல்வி நிதி உதவி வழங்கும் விழா நடைபெற்றது.
கோவைபுதூர் பகுதியில் செயல்பட்டு வரும் வி.எல்.பி. ஜானகியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பாக பள்ளி ஆசிரியர்களை கவுரபடுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஆச்சார்யா விருது வழங்கும் விழா நடைபெற்று வருகின்றது.
இதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு தமிழக அரசின் உயர்வுக்குப் படி திட்டத்தின் கீழ் உயர்கல்வியைத் தொடரவும், அவர்களை ஊக்குவிக்கவும், கல்வி உதவித்தொகை வழங்கும் விழா மற்றும் சிறந்த ஆசிரியர்களுக்கு ஆச்சார்யா விருதுகள் வழங்கும் விழா கல்லூரி அரங்கில் நடைபெற்றது.

வி.எல்.பி. ஜானகியம்மாள் அறக்கட்டளையின் தலைவர் சூர்யகுமார் தலைமையில் நடைபெற்ற இதில், சிறப்பு விருந்தினராக கோவை மாவட்டத்தின் கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் செண்பகலட்சுமி கலந்து கொண்டு தனியார் மற்றும் அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் சிறப்பாக செயல்படும் பள்ளி தாளாளர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவித்தார்.
முன்னதாக விழாவில் பேசிய அவர், மாணவர்கள் விடாமுயற்சி மற்றும் தொலைநோக்குப் பார்வையுடன் சிறந்து விளங்க வேண்டும் என்றும், கல்வி மட்டுமே ஒருவரை சிறந்த மனிதனாகவும், சமூகத்தில் உயர்வான நிலைக்கு கொண்டு செல்லும் என்றும் வலியுறுத்தினார்.
ஒரு நாட்டின் முன்னேற்றத்தில் கல்வி முக்கிய பங்கு வகிப்பதாக கூறிய அவர், அத்தகைய கல்வியை வழங்கும் ஆசிரியர்கள் போற்றுதலுக்கு உரியவர்கள் என அவர் கூறினார்.
விழாவில் கோவை மாவட்டத்தின் தலைமைக் கல்வி ஒருங்கிணைப்பாளர் சுபாஷ் மாணவர்களின் வெற்றியை வளர்ப்பதிலும், வழிகாட்டுவதலும், ஆதரவு அமைப்புகளின் இன்றியமையாத பங்கை எடுத்துரைத்தார்.
தொடர்ந்து, ஆசிரியர் சேவைக்காக 160 கல்வியாளர்களுக்கு ஆச்சார்யா விருது வழங்கப்பட்டது. கல்வியில் சிறந்து விளங்கிய மாணவர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்ச்சியில், கல்லூரியின் முதல்வர் கலைவாணி, கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் பிருந்தா, ஒருங்கிணைப்பாளர் லதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.