மதுரை விளாச்சேரி பகுதியைச் சேர்ந்த குலம் ஹஜ்ரத் என்பவரின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் 21 பேர் ஒரு வேனில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்துள்ளனர்.

கொடைக்கானலில் அழகை ரசித்து விட்டு மீண்டும் அவர்கள் ஊர் திரும்பி உள்ளனர்.
இவர்கள் வந்த வேன் கொடைக்கானல் மலைச்சாலையில் டம் டம் பாறை என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தபோது வேன் திடீரென ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் இடது புறம் இருந்த பாறையில் மோதி சாலையில் கவிழ்ந்தது.
அதிவேகமாக பாறையில் மோதி வேன் கவிழ்ந்ததால் வேனில் பயணம் செய்த 13 சிறார்கள் உட்பட 22 பேர் படுகாயம் அடைந்தனர்.வேன் இடிபாடுக்குள் காயத்துடன் சிக்கி தவித்தவர்களை மலைச்சாலையில் வாகனத்தில் வந்த சுற்றுலா பயணிகள் மீட்டனர்.
காயம் அடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மற்றும் சுற்றுலா பயணிகளில் வாகனங்களில் வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டனர்.
அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு அனைவரும் மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்து மருத்துவமனையில் குவிந்த நூற்றுக்கணக்கான இளைஞர்கள் அரசு மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் களை விரைவாக வரவழைத்து காயம் அடைந்தவர்களை உடனடியாக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பதற்கு உறுதுணையாக செயல்பட்டனர்.
இதனிடையே காயம் பட்டவர்களின் சிலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து தேவதானப்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானல் மலை சாலையில் விபத்துக்குள்ளாகி படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.