


ஆவின் நிறுவனத்தின் அடுத்த அதிரடியாக பனீர் மற்றும் பாதாம் மிக்ஸ் ஆகியவற்றின் விலையை உயர்த்தியிருப்பது மக்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.
தமிழகத்தில் ஆவின் நிறுவனத்தின் மூலம் தரமான பொருட்களை குறைந்த விலையில் மக்களுக்கு பயன்தரும் வகையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நாள் ஒன்றுக்கு 25 லிட்டர் லட்சம் லிட்டர் ஆவின் பால் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் மட்டும் 13 லட்சம் லிட்டர் ஆவின் பால் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், ஐந்து லட்சம் பேர் ஆவின் அட்டைதாரர்கள் ஆக இதில் பங்கெடுத்துள்ளனர்.
ஆவின் நிறுவனத்தினால் பால் மட்டுமின்றி, குலாப்ஜாமுன், பால்கோவா, ஐஸ்கிரீம், நெய் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் , கடந்த சில மாதங்களுக்கு முன்பு நூடுல்ஸ், மில்க் கேக், பாயாசம் மிக்ஸ், யோகர்ட் ட்ரிங்ஸ் உள்ளிட்டவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார்.
இந்நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள ஆவின் விற்பனையகங்களில், பனீர் மற்றும் பாதாம் மிக்ஸ் பொருட்களின் விலை உயர்வு, இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. ஆவின் பனீர் மற்றும் பாதாம் பவுடர் விலையை 20 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை உயர்த்தி ஆவின் நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒரு கிலோ பனீர் விலை 450 இலிருந்து 550 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 200 கிராம் பாதாம் மிக்ஸ் விலை 100 ரூபாயிலிருந்து 120 ஆக அதிகரித்துள்ளது. ஆவின் நிறுவனத்தின் அடுத்தடுத்த விலை உயர்வு மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

