

ரயில் டிக்கெட்களை முன்பதிவு செய்யும் ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் திடீரென முடங்கியதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
ரயில் பயணம் செய்ய விரும்பும் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்ய ஏதுவாக இந்திய ரயில்வே துறை சார்பில் ஐ ஆர் சி டி சி இணையதளம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த இணையதளம் மூலம் பயணிகள் எளிதில் முன்பதிவு செய்துகொள்ளலாம். மடிக்கணினிகள் வாயிலாகவும், செல்போன் ஆப்கள் மூலமாகவும் இந்த இணையதளத்தில் பயணிகள் முன்பதிவு செய்து பயணம் செய்து கொள்ளலாம். இந்த வசதி ரயில் நிலையங்களில் டிக்கெட்டுகளுக்காக பயணிகள் காத்திருப்பதை தவிர்க்கிறது.
இந்த நிலையில், ஐ ஆர் சி டி சி இணையதளம் முடங்கியதால், ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் பயணிகள் அவதி அடைந்தனர். இணையம் மற்றும் செயலியில் பணம் செலுத்துவதில் தொழில்நுட்ப சிக்கல் ஏற்பட்டுள்ளதால் ஐ ஆர் சி டி சி இணையதளம் முடங்கியுள்ளது. பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்ய Ask disha விருப்பத்தை பயன்படுத்த அறிவுறுத்தியுள்ள ஐ ஆர் சி டி சி, தொழில்நுட்ப கோளாறு விரைவில் சரிசெய்யப்படும் என தெரிவித்துள்ளது.

