• Thu. Aug 20th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

அமளி ஏற்படுத்திய ஆம் ஆத்மி எம்.பி சஸ்பெண்ட்..!

Byவிஷா

Jul 24, 2023

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் கடும் அமளி ஏற்படுத்திய ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய்சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மழைக்கால கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்வதாக மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் அறிவித்துள்ளார்.
முன்னதாக, டெல்லியில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அதில் மணிப்பூர் சம்பவம் தொடர்பாக குறுகிய நேர விவாதத்துக்கும், உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிலளிக்கவும் மத்திய அரசு ஒப்புக்கொண்டது. ஆனால் இந்த விவகாரத்தில் முதலில் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் பிடிவாதமாக இருந்தன. இந்த விவகாரத்தில் நேரக் கட்டுப்பாடின்றி அனைத்துக் கட்சிகளும் பேசி விவாதம் நடத்தவும் அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தின.
இதுதொடர்பாக அமளி நீடித்ததால், கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே இரு அவைகளும் எந்த அலுவலையும் கவனிக்காமல் முடங்கின. இந்நிலையில், புதிதாக இந்தியா கூட்டணியை உருவாக்கியுள்ள எதிர்க்கட்சிகள், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயின் அறையில் சந்திக்கவும், நாடாளுமன்றத்தில் தங்களின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்கவும் முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தன. அதைத்தொடர்ந்து, இன்று இரு அவைகளிலும் நுழையும் முன்னர், மணிப்பூர் சம்பவம் தொடர்பாக நாடாளுமன்ற இரு அவைகளிலும் பிரதமர் மோடி விளக்கம் அளிக்கக்கோரி, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை முன் போராட்டம் நடத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருந்தன. அதன்படி இன்றைய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தான் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக அமளியில் ஈடுபட்ட ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி. சஞ்சய் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.