இரவு நேர ரயிலில் பயணம் செய்த இளம் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளிக்க முயன்ற முதியவர் கைது
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த லட்சுமணன் (வயது 59) என்பவர் கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி சென்னை செல்வதற்காக பொதிகை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் படுக்கை வகுப்பில் பயணம் மேற்கொண்டு உள்ளார். அப்போது மதுரை – திண்டுக்கல் இடையே ரயில் பயணத்தின் போது,
ரயிலில் மேல் படுக்கை(Upper berth) இருந்தவரின் எதிராக இருந்த இளம்பெண்ணுக்கு ஆபாசமான சைகைகளை தொடர்ச்சியாக கொடுத்து தொல்லை செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து அந்தப் பெண் முதியவரை பலமுறை எச்சரித்தும் தொடர்ச்சியாக இளம்பெண்ணுக்கு தொல்லை கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பின் ரயில்வே உதவி அழைப்பு எண் 139 க்கு தொடர்பு கொண்டுள்ளார்.
இதனை அடுத்து ரயில் திருச்சி ரயில் நிலையத்தில் நின்றதும் அங்கு வந்த இரண்டு பெண் போலீசாரிடம் முதியவர் லட்சுமணனை அடையாளம் காண்பித்து பிடித்து கொடுத்துள்ளார். தொடர்ந்து அவரை மதுரை ரயில் நிலையத்திற்கு அழைத்து வந்து இளம் பெண்ணிற்கு தொல்லை அளித்த குற்றத்திற்காக அவர் மீது மதுரை இருப்புபாதை போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
தொடர்ந்து இரவு நேர ரயில் பயணத்தில் தனியாக செல்லும் பெண்களின் பாதுகாப்பை உறுதி படுத்த ரயில்வேதுறை சார்பில் போதிய விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை கூடுதலாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும் ரயில் பயணத்தின் போது பயணிகளுக்கு ஏற்படும் இதுபோன்ற பிரச்சினைகளின் போது அவசர கால உதவி அழைப்புகள் (அவசர உதவி எண் 139, 1098,100) குறித்தான விழிப்புணர்வை தொடர்ச்சியாக ஏற்படுத்த வேண்டும்.








