மரம் நடுவதில் ஆர்வம் கொண்ட இளைஞர் ஒருவர், தான் வளர்த்த தெருவோர மரத்தை வெட்டியதால் மனமுடைந்து பூச்சி மருந்தைக் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை விமானநிலையம் அருகேயுள்ள தனியார் கல்லூரி ஒன்றில் ஓட்டுநராகப் பணி புரிந்து வருபவர் ஜெகதீஷ் (35). 9-ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். தாயார் மகேஸ்வரி. தந்தை இல்லை. சகோதரர் ராஜ்குமார், மதுரை வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் தனியார் பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
ஜெகதீஷ், இயற்கையின் மீதும் மரங்கள் மீதும் அளவற்ற காதல் கொண்டவர். தன்னுடைய சிறுவயதிலிருந்தே மரக்கன்றுகள் நடுவதில் மிகுந்த ஈடுபாட்டுடன் இயங்கி வருபவர். இதற்காக திருமணம் செய்து கொள்ளவில்லை.
ஒவ்வொரு நாளும் ஏதேனும் ஒரு பொது இடத்தில் மரக்கன்றுகள் நடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அதுமட்டுமன்றி, தண்ணீர் ஊற்றி, பராமரித்துப் பேணி காப்பதில் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டு வந்துள்ளார். யாரேனும் மரக்கன்றுகள் கேட்டால் உடனடியாக இவரே வாங்கிக் கொண்டு வந்து ஊன்றி அதற்கான ஆலோசனைகளையும் வழங்குவது வழக்கம்.
இதுகுறித்து ஜெகதீஷின் சகோதரர் ராஜ்குமார் கூறுகையில், “டிவிஎஸ் நகரில் உள்ள பாண்டியன் நகரில் நாங்கள் வசித்தபோது, அங்கு ஒரு தெருவில் ஐந்து வேப்பமரக்கன்றுகளை நட்டு வளர்த்தார். நன்றாக வளர்ந்து நிழல் கொடுத்துக் கொண்டிருந்த அந்த மரத்தை அண்மையில் வெட்டிவிட்டனர்.
இதனைப் பார்த்த ஜெகதீஷ், அந்த மரத்திற்கு அருகிலுள்ள வீட்டினரிடம் மரம் வெட்டப்பட்டதற்கான காரணத்தைக் கேட்டுள்ளார். இந்நிலையில் மரத்தை வெட்டிய வீட்டுக்காரர்கள் மீது சுப்பிரமணியபுரம் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார்.
ஜெகதீஷ் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் அவரிடம் விசாரிப்பதற்காக செப்டம்பர் 19 ஆம் தேதி அவர் வீட்டிற்குச் சென்றனர். காவலர்கள் ஜெகதீஷிடம் சமாதானம் பேச முயன்றுள்ளனர். பிறகு அவரிடம் ஆதார் அட்டையைக் கோரியுள்ளனர். புகார் அளித்தும் மரத்தை வெட்டியவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், நம்மிடம் வந்து விசாரணை செய்கிறார்களே என மனமுடைந்து வீட்டிலிருந்த பூச்சிமருந்தைக் குடித்து தற்கொலை செய்து கொண்டார்
மரங்கள் மீது தீரா பாசம் கொண்ட எனது அண்ணனுக்கு இப்படி ஒரு சோகமா நிகழ வேண்டும்?’ என வேதனை தெரிவித்துள்ளார்.
மரத்தை வெட்டியதால் தற்கொலை செய்துகொண்டாரா? போலீஸ் மிரட்டல் காரணமா என்பதும் விவாதமாகி வருகிறது.
