• Fri. Apr 26th, 2024

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் இந்திய வம்சாவளி பெண்..!

ByA.Tamilselvan

Feb 3, 2023

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு (2024) நவம்பர் 5-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கிஹாலே போட்டியிடப் போவதாக தகவல் வெளியாகி, அமெரிக்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த ஆண்டு நடைபெறப் போகும் தேர்தலுக்கு, இப்போதிருந்தே தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் ஜோபைடன் ஜனநாயக காட்சியின் சார்பில் மீண்டும் போட்டியிடுகிறார். அதே போல் கடந்த தேர்தலில் தோல்வியை சந்தித்த முன்னாள் அதிபர் டிரம்ப் குடியரசு கட்சியின் சார்பில் போட்டியிடுகிறார். அவர் தேர்தலில் போட்டியிடுவதை முறைப்படி அறிவித்து, தேர்தலுக்கான பிரசாரத்தையும் தொடங்கி விட்டார்.
அமெரிக்காவில் பிரதான கட்சிகளான ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சிகள் சார்பில், அதிபர் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள், அந்தந்தக் கட்சிகளின் உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளின் ஆதரவைப் பெற வேண்டும். இதற்காக அவர்கள் ஒவ்வொரு மாகாணமாகச் சென்று, தங்கள் கட்சியின் உறுப்பினர்களிடையே பிரச்சாரம் செய்வர். இறுதியாக நடக்கும் கட்சி மாநாட்டில், தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்று, தங்கள் கட்;சியின் வேட்பாளைரைத் தேர்வு செய்வர். தேர்தல் செலவுகளை ஏற்கும் திறன், நிதி திரட்டுதல், ஊடகங்களின் ஆதரவு, அரசியல் அனுபவம் போன்றவற்றில் சிறந்து விளங்குபவரே வேட்பாளராக தேர்வு செய்யப்படுவார். அந்த வகையில், டொனால்டுடிரம்ப் குடியரசு கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டு வந்தது.
இந்த நிலையில் 2024 அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியை சேர்ந்த மூத்த பெண் அரசியல்வாதியும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான நிக்கி ஹாலே போட்டியிட முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வருகிற 15-ம் தேதி அவர் தனது முடிவை அதிகாரபூர்வமாக அறிவிக்க இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. நிக்கி ஹாலே அதிபர் பதவிக்கு போட்டியிடுவது உறுதியானால் குடியரசு கட்சியின் வேட்பாளர் போட்டியில் டிரம்புக்கு எதிரான முதல் போட்டியாளராக அவர் இருப்பார். இவரது பெற்றோர் நம் நாட்டின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.
தெற்கு கரோலினா மாகாணத்தின் கவர்னராக 2 முறை பதவி வகித்தவரும், ஐ.நா.வுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதருமான 51 வயதான நிக்கி ஹாலே, கடந்த 2020-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் டிரம்பின் தீவிர ஆதரவாளராக செயல்பட்டார். அதோடு டிரம்ப் அதிபர் பதவிக்கு மீண்டும் போட்டியிட்டால் அவருக்கு எதிராக களம் இறங்க மாட்டேன் எனவும் நிக்கி ஹாலே கூறி வந்தார்.
ஆனால், சமீப காலமாக அவரது நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் தனது சமீபத்திய பேட்டிகளில், இது ஒரு புதிய தலைமுறைக்கான நேரம். நாட்டை ஒரு புதிய தலைவர் ஆள வேண்டும் என பேசி வருவது அமெரிக்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *