• Wed. May 1st, 2024

ஜனநாயக கடமையாற்ற ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்

Byவிஷா

Apr 18, 2024

நாளை மக்களவைத் தேர்தலில் வாக்களிப்பதற்காக, வாக்காளர் ஒருவர் ஜப்பானில் இருந்து சேலம் வந்துள்ளார்
சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டியைச் சேர்ந்தவர் சங்கர் (வயது 48). டிசைனிங் இன்ஜினியராக பணி புரியும் இவர், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வேலைக்காக ஜப்பான் நாட்டுக்கு சென்று உள்ளார். அங்கே தற்போது வரை 21 ஆண்டுகளாக வேலை பார்த்து வரும் போதிலும் அவர் ஜப்பான் குடியுரிமை பெறாமலேயே இருந்து வருகிறார்.
நாளை தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சேலம் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வீரபாண்டி சட்டசபை தொகுதி வாக்காளராக அவர் தனது வாக்கைப் பதிவு செய்வதற்காக ஜப்பானிலிருந்து விமானம் மூலம் கடந்த 11-ஆம் தேதி சேலத்திற்கு புறப்பட்டு வந்துள்ளார். இதற்காக அவர் விமானத்தில் வந்த வகையில் ஒரு ஓட்டுப் போடுவதற்காக ஒரு லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட தொகையைச் செலவு செய்து ஜனநாயக கடமையாற்றச் சேலம் கொண்டலாம்பட்டி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து இன்ஜினியர் சங்கர் கூறியதாவது..,
“கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சேலத்திற்கு குடும்பத்துடன் வந்து விட்டு ஜனவரி மாதம் ஜப்பானுக்கு சென்று விட்டேன். நான் ஜப்பானில் சேர்ந்த தெசிகோ என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளேன். எங்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த 11-ஆம் தேதி விமான மூலம் கோயம்புத்தூருக்கு வந்து, அங்கிருந்து ஊருக்கு வந்தேன்.
சுமார் 11 மணி நேர விமான பயணம் செய்து, எனது ஜனநாயக கடமையை ஆற்ற வந்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. ஜப்பான் நாட்டுக்கு நான் சென்று 21 ஆண்டுகளாகிறது. அங்கு இந்தியர் என்றால் நல்ல மரியாதை உண்டு. இருப்பினும் கடந்த பத்து ஆண்டுக் கால மோடியின் ஆட்சியால் இந்தியர்களுக்கு ஜப்பானில், மதிப்பும் மரியாதையும் கூடி உள்ளது. குறிப்பாக இந்தியாவில் ஸ்வச் பாரத் திட்டத்தில் 10 கோடி கழிப்பிடங்கள் மகளிர்க்கு கட்டிக் கொடுத்து உள்ளது மோடி அரசு.
ஜப்பானில் இந்த செய்தி பெரிய அளவில் வெளி வந்தது. மேலும் இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் கொரோனா தடுப்பூசி 100 கோடி மக்களுக்கு போட்டதுடன் மட்டுமின்றி 96 நாடுகளுக்கு தடுப்பூசி மருந்து அனுப்பி இந்தியா சாதனை படைத்தது. பெரிய அளவில் தலைப்புச் செய்தியாக ஜப்பான் நாட்டின் நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் வெளிவந்தது. இதனால் இந்தியர்களுக்கு மேலும் மரியாதை ஏற்பட்டுள்ளது.
புதிய புராஜெக்ட் கேட்டு நாங்கள் சென்றால் உடனடியாக தருகிறார்கள். மேலும் ஜப்பான் நாடு இந்தியாவில் அதிக முதலீடுகளை குறைந்த வட்டி விகிதத்தில் அளித்து வருகிறது. இதற்கு மோடி அரசு தான் காரணம் என்பதால் பிரதமர் மோடியால் ஈர்க்கப்பட்டு நான் வாக்களிக்க தற்போது வந்துள்ளேன். அனைவரும் ஜனநாயக கடமை ஆற்ற வேண்டும்” என்று அவர் கூறினார். சங்கர் ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் வசித்து வருகிறார்.
நடிகர் விஜய் நடித்த சர்க்கார் திரைப்படத்தில், விஜய் ஒரு ஓட்டுப் போடுவதற்காக இந்தியாவுக்கு வருவது போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். அதைப் போன்று சங்கரும் ஜப்பானிலிருந்து சேலத்திற்கு ஓட்டுப் போட வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *