• Tue. May 14th, 2024

அனுப்பப்பட்டியில் ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோத திருவிழா..!

ByP.Thangapandi

Jan 6, 2024
திருமங்கலம் அருகே அனுப்பப்பட்டி என்ற ஊரில், ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோத திருவிழா நடைபெற்றது. இதில், 10 ஆயிரம் பேருக்கு கறி விருந்து பரிமாறப்பட்டது
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ளது அனுப்பபட்டி. இந்த ஊரில் காவல் தெய்வமான கரும்பாறை முத்தையா கோயில் உள்ளது. இந்த கோயிலில் பல ஆண்டுகளாக மார்கழி மாதம் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் திருவிழா பாரம்பரியமாக நடந்து வருகிறது. இந்த திருவிழாவில் பிறந்த பெண் குழந்தை முதல் 90 வயதிற்கு மேற்பட்ட மூதாட்டிகள் வரையிலான பெண்கள் பங்கேற்க அனுமதி கிடையாது.
இந்த விழாவினையொட்டி பக்தர்கள் வேண்டுதலாக கருப்பு நிற ஆடுகளை நேர்த்திக் கடனாக விட்டு செல்வர். ஓராண்டுகள் இந்த ஆடுகள் வளர்ந்து நேர்த்திக் கடனாக முத்தையா சாமிக்கு பலியிடப்படும். ஆடுகள் கோயிலிலேயே வளர்க்கப்படுகின்றன. இந்த ஆடுகள் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் மேய்ச்சலுக்காக வயல் மற்றும் விளைநிலங்களில் உணவை தேடி செல்லும் போது, யாரும் விரட்டமாட்டார்கள். முத்தையா சாமியே வந்து தங்களது வயலில் இரை தேடுவதாக நம்பிக்கை வைத்துள்ளனர். இந்த ஆண்டு கரும்பாறை முத்தையா கோயில் திருவிழா இன்று காலை நடந்தது.
காலை 8 மணிக்கு பொங்கல் வைத்து வழிபாட்டை துவக்கினர். பின்னர், நேர்த்திக் கடனாக செலுத்தப்பட்ட 50 ஆடுகள் பலியிடப்பட்டு உணவாக சமைக்கப்பட்டன. 70 மூடை அரிசியில் சாதம் தயாரானது. இந்த கறி விருந்து அங்கு கூடியிருந்த சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களுக்கு வழங்கப்பட்டது. இலை போட்டு சாதமும், ஆட்டுகறி குழம்பும், சர்க்கரையும் ஆண்களுக்கு பிரசாதமாக பறிமாறப்பட்டது. சாப்பிட்ட பிறகு இலையை எடுக்காமல் அப்படியே விட்டுச் செல்வது வழக்கம். இந்த இலைகள் காயந்து, அந்தப் பகுதியில் இருந்து கலைந்த பிறகே பெண்கள் கோயிலின் தரிசனத்திற்கு வருவர். இன்று நடந்த கறிவிருந்தில் திருமங்கலம், கரடிக்கல், உரப் பணூர் மாவிலிபட்டி, செக்காணூரணி, சோழவந்தான், உசிலம் ருட்டி, வாகைகுளம், கருமாத்தூர், செல்லம்பட்டி, திருநகர், மதுரை, தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 10 ஆயிரதிற்கும் மேற்பட்ட ஆண்கள் கலந்து கொண்டனர். கரும்பாறை முத்தையா சுவாமி கோயில் திருவிழாவையொட்டி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *