நன்றாக படித்து உயர்கல்வி பயின்று அரசு தேர்வுகளில் பங்கேற்று தேர்ச்சி பெற்றால் ஒரு சமுதாயம் முன்னேற முடியும் என முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் ராஜபாளையத்தில் பேசினார்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மறவர் மகாசன சபையின் 62 ஆம் ஆண்டு விழாவும், கல்வி அறக்கட்டளை சார்பில் கல்வி ஊக்கப் பரிசு வழங்கும் விழாவும் மற்றும் படத்திறப்பு விழாவும் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கலந்து கொண்டு தேவர் சிலைக்கு மாலை அணிவித்தார். பின்னர் விடுதலைக்கு முதல் முழக்கமிட்ட மன்னன் மாவீரன் பூலித் தேவன் படத்தை மறவர் நல கூட்டமைப்பு பொதுச்செயலாளர் விஜயகுமாரும், ராணி வேலு நாச்சியார் படத்தை ஆப்பநாடு மறவர் சங்கத் தலைவர் கேப்டன் டாக்டர் ராம்குமார் பாண்டியனும், பாண்டித்துரை தேவர் படத்தை ஓ. பன்னீர்செல்வமும் திறந்து வைத்தனர்.
பின்னர் விழாவில் பேசும்போது,” வருங்காலத்தில் உயர் கல்வியை தெளிவாக படித்து ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற பொது தேர்வுகளிலும், அரசு தேர்வுகளிலும் கலந்து கொண்டு சிறப்பாக தேர்ச்சி பெற்று வந்தால் மட்டுமே ஒரு சமுதாயம் முன்னேற முடியும். எனவே அனைவரும் படித்து முறையாக தேர்வுகளில் கலந்து கொண்டு தொழில் செய்ய முன்வர வேண்டும் என மாணவ, மாணவிகளை கேட்டுக்கொண்டார். பின்னர் பத்தாம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்புகளில் முதல் மதிப் பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகளை வழங்கினார்.

மறவர் மகாசபை தலைவர் எம். சேதுராகவன் தலைமையில் துணைத் தலைவர் சீமான் முத்தையா முன்னிலையில் செயலாளர் மாரியப்பன் வரவேற்று பேசினார். துணைச் செயலாளர் மணிகண்டன், நல்லமுத்து ஆகியோர் ஆண்டறிக்கை வாசித்து விளக்கவுரை ஆற்றினார்கள். முடிவில் மாரிமுத்து நன்றி கூறினார். விழாவில் முன்னாள் மறவர் மகாசபை தலைவர்கள் மற்றும் முக்கியமான பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.