கோவை அவிநாசி சாலையில் நள்ளிரவில் கட்டுப்பாடின்றி காரை ஒட்டி வந்து விபத்து ஏற்படுத்தியதோடு, காரின் மேல் ஏறி நின்று சிகரெட் பிடித்து ரகளை செய்த வாலிபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் அந்த வாலிபருக்கு தர்ம அடி கொடுத்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

கோவை, அவிநாசி சாலையில் நேற்று இரவு கார் ஒன்று அதிவேகமாக கட்டுப்பாடின்றி தாறுமாறாக ஓடியது. அந்த கார் பி.எஸ்.ஜி கல்லூரி அருகே சென்ற போது அங்கு இருந்து இரு சக்கர வாகனங்கள் மீது பயங்கரமாக மோதி விபத்தை ஏற்படுத்தியும், காரை நிறுத்தாமல் அந்த வாலிபர் தப்பிச் செல்ல முயன்றார்.
வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் துரத்திச் சென்று காரை சூழ்ந்து கொண்டு நிறுத்தினார். காரை ஓட்டி வந்த அவரை கீழே இறங்கச் சொல்லி பொதுமக்கள் வலியுறுத்தினார். ஆத்திரம் அடைந்த சிலர் காரின் கண்ணாடிகளையும் அடித்து நொறுக்கினர்.
அப்பொழுது வேட்டி, பனியன் உடன் காரில் இருந்து இறங்கியவர் திடீரென காரின் மேற்கூரை மீது ஏறி நின்றார். கீழே இறங்க மறுத்து வாலிபர் வாயில் சிகரெட்டை பற்ற வைத்துக் கொண்டு அங்கு இருந்தவர்களிடம் ரகளை செய்தார். பொதுமக்கள் அவரை தூக்கி இழுத்து கீழே இறக்கி தர் அடி கொடுத்தனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த பீளமேடு காவல் துறையினர். அவரை மீட்டு அழைத்துச் சென்றனர். அப்பொழுது அவர் முன்னுக்குப் , பின் முரணாக பேசி வருவதால் அவர் மீது போதையில் இருந்தாரா ? அல்லது கஞ்சா போன்ற இதர போதை பொருட்களை பயன்படுத்தினாரா ? என்பது குறித்து அறிய அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அழைத்துச் சென்றனர். விபத்துக்கு உள்ளான கார் பறிமுதல் செய்யப்பட்டு பீளமேடு காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
பின்னர் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர் பெயர் ஆண்டனி என்பதும் அதே பகுதியில் கட்டிடங்களுக்கு கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருவதாகவும் அவர் கடந்த சில நாட்களாக மன அழுத்தத்திற்கு மருந்துகள் எடுத்துக் கொண்டு வந்ததாகவும், கடந்த சில நாள் மருந்து எடுக்காததால், இதுபோன்று ரகளையில் ஈடுபட்டதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
அவிநாசி சாலையில் காரின் மீது ஏறி நின்று ரகளை செய்தது நேற்று இரவு பெரும் பரபரப்பு நிலவியது குறிப்பிடத்தக்கது.




