• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

உசிலம்பட்டியில், விநாயகர் சிலையில் வைத்து பூஜை செய்த ஒரே ஒரு லட்டு – 1லட்சத்து 51ஆயிரத்திற்கு ஏலம்

ByP.Thangapandi

Sep 10, 2024

உசிலம்பட்டி அருகே விநாயகர் சிலையில் வைத்து பூஜை செய்த ஒரே ஒரு லட்டு. 1 லட்சத்து 51 ஆயிரத்திற்கு ஏலம் எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மலைப்பட்டி கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதூர்த்தி விழாவை வெகுவிமர்சையாக கொண்டாடுவது வழக்கம்.

இந்த ஆண்டும் விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு இக் கிராமத்தில் விநாயகர் சிலை வைக்கப்பட்டு பொங்கல் வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த ஆண்டு விநாயகர் கையில் லட்டு இருக்கும் அமைப்பிற்காக ஒரிஜினல் லட்டை கையில் வைத்து பூஜைகள் நடைபெற்றன.

இன்று சிலையை எடுத்து அருகில் உள்ள கண்மாய் பகுதியில் கரைக்க ஊர்வலமாக எடுத்து செல்லும் முன், சிலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட லட்டு கிராம மக்கள் சார்பில் ஏலமாக விடப்பட்டது.

இந்த ஏலத்தில் அதே ஊரைச் சேர்ந்த மூக்கன் என்பவர் இந்த ஒரே ஒரு லட்டை 1 லட்சத்து 51 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் மகிழ்ச்சியடைந்த கிராம மக்கள் இந்த ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் இதே போன்று விநாயகர் சிலையில் வைத்து பூஜை செய்யப்படும் லட்டு ஏலம் விடப்படும் எனவும், இந்த ஆண்டு ஏலம் எடுத்த மூக்கனுக்கு அடுத்த ஆண்டு ஏல தொகை கட்டும் போது 1 பவுன் தங்க மோதிரம், 10 வேட்டி, சட்டை, 5 சேலைகள் பரிசாக வழங்கப்படும் என கிராம மக்கள் அறிவித்துள்ளதும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விநாயகர் சிலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட ஒரே ஒரு லட்டு 1 லட்சத்து 51 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்ட சம்பவத்தின் பரபரப்பு அடங்கும் முன் ஏலம் எடுத்த மறுநொடியே லட்டு, பூந்தியாகி அனைவராலும் உண்ணப்பட்டது நெகிழ்ச்சியின் உச்சமாக அனைவராலும் பேசப்படுகிறது.