கோவை, நீலம்பூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் 500 க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர்.

கோவை நகர் மற்றும் புறநகர் பகுதியில் இருந்து ஏராளமான குழந்தைகள், நாள்தோறும் பள்ளி வாகனங்கள் மூலம் வந்து செல்வது வழக்கம் இந்நிலையில் தீபாவளி பண்டிகை ஒட்டி நான்கு நாட்கள் விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அடுத்த எலச்சிபாளையம் பகுதியில் இருந்து சைதன்யா குழுமத்திற்கு சொந்தமான கல்லூரி வேனில் பள்ளி குழந்தைகளை அழைத்துக் கொண்டு ஓட்டுநர் மகேஸ்வரன் சேலம் கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டு இருந்தார்.
அப்போது கருமத்தம்பட்டி அருகே வரும் போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலை ஓரத்தில் இருந்த தடுப்பு மீது மோதி நின்றது. இதில் பள்ளி மாணவர் ஒருவர் காயம் அடைந்தார். மற்ற ஐந்து மாணவர்கள் காயம் இன்றி உயிர் தப்பினர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் குழந்தைகளை மீட்டு மற்றொரு வாகனத்தில் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். காயம் பட்ட சிறுவன் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு உள்ளார்.

இது குறித்து அங்கு இருந்தவர்கள் கூறும்போது, குழந்தைகளை ஏற்றிக் கொண்டு வந்த வேன் கருமத்தம்பட்டி பகுதிக்குள் வருவதற்காக தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சர்வீஸ் சாலைக்கு சாலைக்கு வேன் திரும்பும் போது கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பில் மோதியது. இந்த வாகனம் முறையாக பராமரிக்கப்படாமல் இருந்தது இந்த விபத்துக்கு காரணம் மேலும் வேனின் டயர் மிக மோசமாக இருந்ததும், இந்த விபத்திற்கு காரணமாக இருக்கலாம் என கூறிய அவர்கள் இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை நடத்திட வேண்டும் மேலும் தற்போது மழை காலம் என்பதால் பள்ளி, கல்லூரி வாகனங்கள் மறுபரிசோதனை செய்யப்பட வேண்டும், ஆண்டுதோறும் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கும் போது வாகனங்கள் ஆய்வு செய்யப்படுவது வழக்கம். ஆனால் அப்போது ஒரு சில தனியார் பள்ளி கல்லூரி வாகனங்கள் முறையாக பராமரிக்கப்படாமல் இருப்பதால் வாகனத்திற்கான சான்று மறுக்கப்படுகிறது, எனினும் ஒரு சில வாகனங்கள் முறையாக பராமரிக்கப்படாமல் இருந்தாலும் பல்வேறு காரணங்களால் அந்த வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

இதனை அந்தந்த மாவட்ட நிர்வாகம் முறையாக கண்காணிக்க வேண்டும் மாணவர்கள் பயணிக்கும் வாகனங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா ? என்பதை அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும் எனவும் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.