• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

பள்ளி திறக்கும் முதல் நாளிலேயே நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த பள்ளிப்பேருந்து

Byவிஷா

Jun 10, 2024

திருவண்ணாமலை அருகே தனியார் பள்ளி பேருந்து ஒன்று, பள்ளி துவங்கப்பட்ட முதல் நாளிலேயே பள்ளிப் பேருந்து தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகம் முழுவதும் இன்று கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், முதல் நாளிலேயே அதிர்ச்சியளிக்கும் சம்பவமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் தனியார் பள்ளி பேருந்து ஒன்று நடுரோட்டில் சென்றுக் கொண்டிருந்த போது திடீரென தீ பிடித்து எரிய துவங்கியது. உள்ளே அமர்ந்திருந்த மாணவர்கள் பேருந்தில் தீப்பிடிப்பதைக் கண்டதும் அலறியடித்தப்படி கீழே இறங்கினார்கள்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே நெசல் கிராமத்தில் ஆரஞ்ச் என்ற தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வர பள்ளி நிர்வாகம் பேருந்துகளை இயக்கி வருகிறது. இந்நிலையில், இன்று காலை வழக்கம் போல் மாணவர்களின் வீடுகளுக்கு சென்று அவர்களை அங்கிருந்து ஏற்றிக்கொண்டு பள்ளி நோக்கி பேருந்து சென்று கொண்டிருந்தது. இதில் ஒரு பேருந்து 13 மாணவர்களுடன் பள்ளியை நோக்கி சென்று கொண்டிருந்தது. நடுக்குப்பம் கிராமம் அருகே பேருந்து சென்றுக் கொண்டிருந்த போது திடீரென பேருந்தின் முன்புறம் புகை வருவதைக் கண்ட ஓட்டுநர் அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக மாணவர்களைக் கீழே இறங்குமாறு கூறினார். மாணவர்கள் அலறியடித்தப்படி பேருந்தில் இருந்து கீழே இறங்கினார்கள். அதன் பின்னர் புகை வந்த பகுதியை பார்வையிட்டதில், பேருந்து முன்புறம் தீ பிடித்தது தெரிய வந்தது. உடனடியாக இது குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர், தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி துவங்கப்பட்ட முதல் நாளிலேயே பள்ளிப் பேருந்து தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.