மதுரை மாவட்டம் மேலூர் அருகே பிரசித்தி பெற்ற அழகர் கோவில் அருள்மிகு கள்ளழகர் திருக்கோயிலில் நாள்தோறும் அதிகப்படியான பக்தர்கள் தரிசனம் செய்து செல்கின்றனர். இந்த நிலையில் திருக்கோவிலில் உள்ள சுந்தரவள்ளி யானை சுட்டெரிக்கும் வெயிலை சமாளிக்கும் வகையில் பாகனுடன் ஆனந்த குளியல் போட்டு விளையாடி மகிழ்ந்து வருகின்றது.

தினமும் யானையை பராமரிக்கும் வகையில் பாகன் சுரேஷ் மூலம் அழகர் கோவில் பகுதியில் நடை பயிற்சியானது காலை, மாலை அளிக்கப்பட்டு சத்தான உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கோயில் உட்புறப் பகுதியில் நூபுர கங்கை தீர்த்தம் நிரப்பப்பட்ட தண்ணீர் தொட்டியில் யானை சுந்தரவள்ளி தாயார் உற்சாகமாக விளையாடி ஆனந்தமாக குளிக்கும் காட்சி வெளியாகி உள்ளது.
கோடை காலம் துவங்கியதால் வெப்ப சூட்டை தணிக்கும் வகையில் ஒரு நாளைக்கு இருமுறை யானை தொட்டியில் குளித்து மகிழ்கிறது. மேலும் வெப்பத்தை தணிக்கும் வகையில் யானைக்கு தண்ணீர் பழம் போன்ற நீர் ஆகார உணவுகளை உணவில் சேர்த்து கொள்ளப்பட்டு வருகின்றது.
கொளுத்தும் வெயிலை சமாளிக்க கோயில் யானை குளித்து விளையாடியது காண்போரை குதூகலத்திலும் மகிழ்ச்சியும் ஆழ்த்தி வருகின்றது.