திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த காரணம் பேட்டையில் “வெல்லும் தமிழ் பெண்கள்” என்ற பெயரில் தி.மு.க மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு இன்று நடக்கிறது. மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின், மாண்புமிகு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பங்கேற்கின்றனர்.

திமுக மகளிரணி செயலாளரும், எம்.பியுமான கனிமொழி தலைமையில் நடக்கும் இந்த மாநாட்டில் ஒன்னரை லட்சத்திற்கும் மேற்பட்ட மகளிர் அணியினர் மற்றும் பெண்களை கலந்து கொள்ள தி.மு.க வினர் ஏற்பாடு செய்து உள்ளனர்.
பிற்பகல் 2 மணி முதல் வாகனங்கள் பார்க்கிங் செய்யவும், மாநாடு பந்தலுக்கு செல்லும் தொண்டர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
அமைச்சர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகளின் சிறப்புரையை தொடர்ந்து மாலை 4 மணிக்கு எம்.பி கனிமொழி மாநாட்டில் பங்கேற்கிறார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை 6 மணிக்கு மாநாட்டு பந்தலுக்கு வருகிறார், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் பங்கேற்கிறார். மாநாடு ஒருங்கிணைப்பு பணியில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஈடுபட்டு உள்ளார்.
வரும் 2026 சபை தேர்தலில் கொங்கு மண்டலத்தில் வெற்றியை பெற்றாக வேண்டும் என்ற நோக்கில் தி.மு.க உள்ளது. இதன் காரணமாகவே கொங்கு மண்டலத்தை குறி வைக்கும் மகளிர் அணி மாநாடு பல்லடத்தில் நடத்தப்படுகிறது. மகளிர் உரிமைத்தொகை, இலவச பேருந்து உள்ளிட்ட பெண்களுக்கான திட்டங்களால் இது பெண்களுக்கான அரசு என்பதை பறைசாற்றும் வகையில் மகளிர் மாநாடு வாயிலாக தி.மு.க தனது பலத்தை காட்ட நினைக்கிறது.
மொத்தத்தில் பல்லடத்தில் நடக்கும் மாநாடு கொங்கு மண்டலத்தை தன் வசமாக நினைக்கும் தி.மு.க வின் தேர்தல் அச்சாரமாக பார்க்கப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்க காலை 11 மணி அளவில் முதல்வர் ஸ்டாலின் கோவை வருகிறார். ஹோட்டலில் ஓய்வு எடுத்துவிட்டு பிற்பகல் காரில் பல்லடம் செல்கிறார். இரவு 8.30 மணிக்கு மீண்டும் கோவையில் இருந்து விமானத்தில் சென்னை புறப்படுகிறார்.

இன்று பிற்பகல் ஒரு மணி அளவில் வரும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மாநாட்டில் பங்கேற்று விட்டு மீண்டும் கோவை வந்து அவிநாசி சாலையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்குகிறார். நாளை காலை ஆர்.எஸ் புரம் சர்வ தேச ஹாக்கி மைதானத்தை திறந்து வைக்க உள்ளார்.
முதல்வர், துணை முதல்வர் வருகைய ஒட்டி மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின்படி ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.




