கோவையில் மட்டன் பிரியாணி ஆர்டர் செய்தவருக்கு புழுவோடு சிக்கன் பிரியாணி வந்தது. கடைக்கு சென்று பார்த்த போது, புழுக்களுடன் பிரியாணி பொட்டலங்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர் கேள்வி கேட்கும் செல்போன் வீடியோ காட்சிகள்.
கோவை, பெரியநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த ரத்தினம் – விமலா தம்பதியினர், அவர்களுக்கு 6 வயது மகள் பிரியாணி கேட்டதால், சோமேட்டோ உணவு விநியோக செயலி மூலம் சரவணம்பட்டி பகுதியில் உள்ள ஷெரீப் பாய் பிரியாணிக் கடையில் மட்டன் பிரியாணி ஆர்டர் செய்தனர். உணவு வந்ததும் திறந்து பார்த்த போது, அதில் மட்டனுக்கு பதிலாக சிக்கன் பிரியாணி இருந்தது. அதிலும் புழுக்கள் நெளிந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக, அவர்கள் சரவணம்பட்டியில் இருக்கும் ஷெரீப் பாய் பிரியாணிக் கடைக்கு நேரில் சென்று முறையிட்டனர். அப்பொழுது அங்கு இருந்த குளிர்சாதன பெட்டியில் திறந்து பார்த்த போது, மேலும் அதில் இருந்த பிரியாணி பொட்டலங்களில் புழுக்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
ஆனால், கடை ஊழியர்கள் சரியான பதில் அளிக்காமல் இருந்து உள்ளனர். மேலும், எங்களுக்கு தமிழ் தெரியாது, நாங்கள் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறி உள்ளனர்.
இதனால் மனம் உடைந்த வாடிக்கையாளர் ரத்தன், உணவு பாதுகாப்புத் துறைக்கும், காவல் நிலையத்திற்கும் புகார் அளித்தனர். ஆனால், புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அவர்கள் வேதனை தெரிவித்து உள்ளனர்.
ஒருவேளை என் மகள் அந்த உணவை சாப்பிட்டு இருந்தால், உயிருக்கே ஆபத்து ஏற்பட்டு இருக்கும் என்று அச்சத்துடன் பெற்றோர் புகார் அளித்து உள்ளனர்.

சென்னையில் ஷவர்மா சிக்கன் சாப்பிட்ட 18 பேர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், கோவையில் நடந்த இந்த சம்பவம், உணவு பாதுகாப்பு மற்றும் விநியோகத்தில் உள்ள குறைபாடுகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்து உள்ளது. விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.









